கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட அலுவலகத்தை கண்டித்து வீட்டுவசதி வாரிய குடியிருப்புவாசிகள் சாலை மறியல்


கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட அலுவலகத்தை கண்டித்து வீட்டுவசதி வாரிய குடியிருப்புவாசிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 Nov 2021 11:23 AM IST (Updated: 9 Nov 2021 11:23 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மழை நீர் புகுந்ததை அடுத்து சிப்காட் திட்ட அலுவலகத்தை கண்டித்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட்டையொட்டி புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சில தொழிற்சாலைகள், நீர் வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்து இருப்பதாலும், முறையாக மழைநீர் வெளியேற வழிவகை செய்யாததாலும் இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று முன்தினம் மழைநீர் புகுந்தது.

சிப்காட் தொழிற்பேட்டையில் இருந்து வந்த இத்தகைய மழைநீர் வீடுகளில் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். மேலும், சாக்கடை மற்றும் சிப்காட் கழிவு கலந்த இந்த மழைநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவானது.

இதனையடுத்து புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மழைநீர் வெளியேற தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தொழிற்சாலைகளில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் வரும் கழிவுகள் கலந்த மழை நீரை வெளியேற்ற நிரந்தர தீர்வு காணாத சிப்காட் திட்ட அலுவலகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேடடை சாலையில் நேற்று திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஒன்றிய கவுன்சிலர் மதன் மோகன் தலைமை தாங்கினார். புதுகும்மிடிப்பூண்டி துணைத்தலைவர் எல்லப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த தாசில்தார் மகேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது சிப்காட் திட்ட அலுவலகம் மூலம் நிரத்தர தீர்வு காண்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து தங்களது 1 மணி நேர சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு குடியிருப்புவாசிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story