வடகிழக்கு பருவமழை எதிரொலி: மீஞ்சூர் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
வடகிழக்கு பருவமழையால் மீஞ்சூர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த ஒரு வார காலமாக பெய்து வருகிறது. இதனால் மழைநீர் தேங்கி நிலையில் மாவட்டத்தில் செல்லும் கொசஸ்தலை ஆறு, ஆரணிஆறு மற்றும் ஆந்திராவில் பாயும் காலங்கி, சொர்ணமுகி ஆறுகளில் வடிகால் பகுதியாக பொன்னேரி தாலுகாவில் உள்ள மீஞ்சூர் ஒன்றியத்தில் வழியாக பழவேற்காடு ஏரியில் புகுந்து வங்க கடலில் கலக்கிறது.இந்நிலையில் நந்தியம்பாக்கம் கிராமத்தில் உள்ள கொங்கியம்மன் நகர், இருளர் காலனி, ராஜிவ்காந்தி நகர், எம்.சி.நகர், அண்ணாநகர் ஆகிய இடங்களில் வெள்ள நீர் குடியிருப்புகளில் புகுந்தது.
மேலும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ள நிலையில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் ஜெயக்குமார், பொன்னேரி ஆர்.டி.ஓ.செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், ரவி, மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் விரைந்து வந்து வெள்ளம் சூழ்ந்த இடங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் கலாவதிநாகராஜ் பொக்லைன் எந்திரம் உதவியுடன் மழைநீர் கால்வாய் அடைப்புகளையும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டிருந்ததை பார்வையிட்டனர். அப்போது சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன், மணலி புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடிராஜன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ருக்கேந்திரராவ், ஊராட்சி செயலாளர் கிருஷ்டியன் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகமாக உள்ளதால் சின்னகாவனம், மடிமைகண்டிகை, வீரங்கிவேடு, அரவாக்கம் ஆகிய கிராமங்களில் நடவு செய்யப்பட்டுள்ள நெல்வயல்களில் மழைநீர் புகுந்து நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மெதூர் ஊராட்சியில் மழைநீர் அடித்து செல்வதால் அச்சரப்பள்ளம் கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. ஊராட்சியில் மழைநீர் தேங்கும் இடங்களில் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் துணைத் தலைவர் உஷாசசிக்குமார், ஊராட்சி செயலாளர் தரணிதரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டு தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story