வண்டலூர் தாலுகாவில் குடியிருப்பு பகுதியில் கொட்டும் மழையில் கலெக்டர் ஆய்வு


வண்டலூர் தாலுகாவில் குடியிருப்பு பகுதியில் கொட்டும் மழையில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Nov 2021 11:39 AM IST (Updated: 9 Nov 2021 11:39 AM IST)
t-max-icont-min-icon

வண்டலூர் தாலுகாவில் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் கொட்டும் மழையில் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வண்டலூர்,

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக விட்டு விட்டு தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தினால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இந்தநிலையில் நந்திவரம், பெருமாட்டுநல்லூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், ஆகிய ஏரிகளில் இருந்து வெளியேறும் நீர் ஆதனூர் ஊரப்பாக்கம் பகுதியில் தொடங்கும் அடையாறு கால்வாய் வழியாக செல்கிறது.

இந்தநிலையில் நேற்று கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதியில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் ஒழுங்காக கால்வாய் வழியாக செல்கிறதா என்பது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேரில் சென்று கொட்டும் மழையில் ஆய்வு செய்தார்.

இதேபோல ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள அடையாறு கால்வாய்களில் தண்ணீர் சரியான முறையில் செல்கிறதா என்பதையும் நேரில் சென்று பார்த்தார். இதேபோல வண்டலூர் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் கால்வாய்களில் நீர் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது மாவட்ட கலெக்டருடன் வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story