காய்கறிகள் வரத்து குறைந்தது
உடுமலை சுற்றுப்புற பகுதியில் பெய்து வருகின்ற பலத்த மழையால் காய்கறி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தளி,
உடுமலை சுற்றுப்புற பகுதியில் பெய்து வருகின்ற பலத்த மழையால் காய்கறி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
காய்கறி சாகுபடி
உடுமலை, தளி அமராவதி பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் தென்னை, வாழை, சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட நீண்டகால பயிர்களையும் காய்கறிகள், தானியங்கள் போன்ற குறுகிய காலப்பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் காய்கறிகள் முக்கிய பங்கு வகிப்பதால் பொதுமக்களும் அதை விரும்பி சொல்கின்றனர்.
இதனால் அன்றாட உணவில் காய்கறிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களும் உழவர் சந்தை, தினசரி சந்தை மற்றும் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளை உற்சாகத்தோடு வாங்கி செல்கின்றனர். மேலும் குறுகிய காலத்தில் அறுவடைக்கு வருகின்ற காய்கறிகள், கீரைகள் விவசாயிகளுக்கு பெரியளவில் நஷ்டத்தை ஏற்படுத்துவதில்லை.
சுழற்சி முறையில் சாகுபடி
இதன் காரணமாக சமீப காலமாக விவசாயிகள் பல்வேறு விதமான காய்கறிகள் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் உடுமலை, தளி, அமராவதி பகுதியில் கிணறு, ஆழ்குழாய் கிணறு திருமூர்த்தி மற்றும் அமராவதி அணையை நீராதாரமாக கொண்டு கத்தரி, அவரைக்காய், வெண்டைக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், அவரைக்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள் சுழற்சி முறையில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
ஒரு சில விவசாயிகள் பந்தல் முறையில் பீர்க்கன், புடலை, பாகல் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தக்காளி செடிகளை பலத்த மழையில் இருந்து காப்பாற்றுவதற்காக குச்சிகளை கொண்டு நிலத்தில் விழாமல் பாதுகாப்பு செய்தனர். அவற்றை பராமரிப்பு செய்து நோய்களிலிருந்தும் பாதுகாத்து வந்தனர்.
விவசாயிகள் வேதனை
இதனால் காய்கறிகள் செடிகளும் நல்ல முறையில் வளர்ந்து வந்தது.
இந்த சூழலில் கடந்த சில நாட்களாக உடுமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளிகள் உள்ளிட்ட மற்ற காய்கறிகள் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. உற்பத்தி குறைந்து விட்டதால் அவற்றின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் உடுமலை தினசரி சந்தையில் தக்காளி பெட்டி ஒன்று ரூ.700 விற்பனையானது.
இதேபோன்று மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. ஆனால் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து குறைந்த அளவில் உள்ளது. மேலும் மழையால் நிலத்தை உழுது அடுத்தகட்ட காய்கறி சாகுபடியை தொடங்க முடியாததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
==================
Related Tags :
Next Story