முல்லைப்பெரியாறு அணையில் கேரளாவுக்கு உரிமை இல்லை


முல்லைப்பெரியாறு அணையில் கேரளாவுக்கு உரிமை இல்லை
x
தினத்தந்தி 9 Nov 2021 7:16 PM IST (Updated: 9 Nov 2021 7:16 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் கேரளாவுக்கு உரிமை இல்லை என்று திண்டுக்கல்லில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல்:

அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் 

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தாமல் தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து 5 மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதன்படி திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், திண்டுக்கல்-திருச்சி சாலையில் கல்லறை தோட்டம் அருகே கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தாமல் தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்தும், நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

கேரளாவுக்கு உரிமை இல்லை 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், திண்டுக்கல், தேனி உள்பட 5 மாவட்டங்களின் தண்ணீர் தேவைக்காக முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டது. 

இந்த அணையில் கேரளாவுக்கு எந்த உரிமையும் இல்லை. 999 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டுக்கு தான் அணை சொந்தம். எனவே ஒரு சொட்டு தண்ணீரை கூட கேரளாவுக்கு விட்டு தரமாட்டோம்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்ட போராட்டம் நடத்தி, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினார். ஆனால் ஒரு இன்ச் அளவுக்கு கூட நீர்மட்டத்தை உயர்த்தாத தி.மு.க. அரசு, தங்கள் ஆட்சியில் நடவடிக்கை எடுத்ததாக கூறுகிறது. கேரள கம்யூனிஸ்டு அரசுக்கு ஆதரவாக செயல்படும் தி.மு.க. அரசை வன்மையாக கண்டிக்கிறோம், என்றார்.

தி.மு.க. கண்டு கொள்ளவில்லை

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயரும் முன்பே கேரள அரசு தன்னிச்சையாக தண்ணீரை திறந்து விட்டுள்ளது. கம்யூனிஸ்டுகளின் ஆதரவு வேண்டும் என்பதற்காக தி.மு.க. கண்டு கொள்ளவில்லை. 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் மக்களுக்கு அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர் என்றார்.

இதில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிசாமி, ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளிதரன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story