தேனி ராஜவாய்க்காலை தூர்வாராமல் மழைநீரை வெளியேற்ற மாற்று ஏற்பாடு பொதுமக்கள் அதிருப்தி
தேனியில் ராஜவாய்க்காலை தூர்வாராமல் மழைநீரை ெவளியேற்ற மாற்று ஏற்பாடு செய்வது பொதுமக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
தேனி:
தேனி நகரில் கொட்டக்குடி தடுப்பணையில் இருந்து தாமரைக்குளம் கண்மாய் வரை சுமார் 2 கிலோமீட்டர் நீளத்துக்கு ராஜவாய்க்கால் செல்கிறது. பல ஆண்டுகளாக இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் தூர்ந்து கிடக்கிறது. இந்த வாய்க்காலில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மழைநீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுவதும், குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்பதும் நீண்டகால பிரச்சினையாக இருந்து வருகிறது.
கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வரும் தொடர் மழையால் ராஜவாய்க்கால் கரையோரத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் மழைநீர் கடந்து செல்ல வழியின்றி பங்களாமேடு பென்னிகுவிக் நகர் குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கியது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
மக்கள் அதிருப்தி
இதுகுறித்து கலெக்டர் முரளிதரனிடம் பொதுமக்கள் புகார் செய்தனர். அவர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டாவது ராஜவாய்க்கால் தூர்வாரப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ராஜவாய்க்காலை தூர்வார பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிக தீர்வு ஏற்படுத்தும் வகையில், பென்னிகுவிக் நகர் திட்டச்சாலையை பெயர்த்து எடுத்து தண்ணீர் வடிந்து செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, பொதுமக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதன் மூலம் கடந்த ஒரு வார காலமாக வீடுகளின் முன்பு தேங்கி இருந்த மழைநீர் மாற்று வழித்தடம் வழியாக முல்லைப்பெரியாற்றை நோக்கி வடியத் தொடங்கியது.
அதேநேரத்தில் பேரிடர் காலத்தில் கூட ராஜவாய்க்காலை தூர்வாரும் பணியை மேற்கொள்ளாமல் இருப்பது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ராஜவாய்க்காலை தூர்வார அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story