மலைப்பாதையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


மலைப்பாதையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 Nov 2021 9:27 PM IST (Updated: 9 Nov 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல்: 


வேரோடு சாய்ந்த மரங்கள் 
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை சுமார் 20 மணி நேரத்திற்கு மேலாக நகர் மற்றும் மலைப்பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்தது. தொடர்மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பகல் நேரத்திலேயே சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கடும் குளிர் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் சிலர் விடுதி அறைகளிலேயே முடங்கினர். வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 



 தொடர்மழை காரணமாக நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் கவுஞ்சி கிராமம் செல்லும் மலைப்பாதையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதேபோல் பூம்பாறை செல்லும் மலைப்பாதையில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின் வயர்களின் மீது விழுந்ததால் மேல்மலை கிராமங்கள் மற்றும் நகர் பகுதியில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர், மின்சார துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். 

பேரிடர் மீட்பு குழு 
ெகாடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சேதங்களை சீரமைப்பதற்கு ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமையில் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், தாசில்தார் முத்துராமன், நகராட்சி ஆணையாளர் நாராயணன் மற்றும் தீயணைப்பு அலுவலர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை கொண்ட பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த குழுவினர் நேற்று மாலை கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு ஒத்திகை நடத்தினர். பின்னர் அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மலைப்பாதையில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.  

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, கொடைக்கானல் மலைப்பாதையில் வத்தலக்குண்டு சாலை, பழனி சாலை மற்றும் மேல்மலை செல்லும் சாலையில் மரங்கள் அவ்வப்போது முறிந்து விழுந்து வருகின்றன. இவற்றை அகற்ற மீட்பு குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்றனர். 


Next Story