தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 Nov 2021 4:10 PM GMT (Updated: 9 Nov 2021 4:10 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல் :

சேதமான மின்கம்பம் மாற்றப்படுமா?
திண்டுக்கல் வேடபட்டி மெயின்ரோட்டில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள மின்கம்பம் சேதம் அடைந்துவிட்டது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தபடி எலும்பு கூடுபோன்று காட்சி அளிக்கிறது. தொடர் மழை பெய்வதால் மின்கம்பம் முறிந்து விடுமோ? என்ற அச்சத்துடன் மக்கள் நடமாட வேண்டியது உள்ளது. எனவே சேதமான மின்கம்பத்தை மாற்ற வேண்டும். 
-மூர்த்தி, வேடபட்டி.

தெருவில் தேங்கிய மழைநீர் 
நிலக்கோட்டை பேரூராட்சி 9-வது வார்டு புதுப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் அங்கன்வாடி மையம் அருகே மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. ஏற்கனவே காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உருவாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தெருவில் மழைநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவி, நிலக்கோட்டை.

கண்காணிப்பு கேமராக்கள் பழுது
கம்பம் புதிய பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் சில கேமராக்கள் பழுதாகிவிட்டன. கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படும். எனவே கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். 
-ராஜபிரபு, கம்பம்.

குப்பை தொட்டி அவசியம்
பழனி அருகே உள்ள கீரனூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் குப்பை தொட்டி இல்லை. இதனால் குப்பைகள் தெருவோரத்திலும், திறந்தவெளியிலும் கொட்டப்படுகின்றன. தற்போது மழைக் காலமாக இருப்பதால் சுகாதாரக்கேடு உருவாகும் அபாயம் உள்ளது. எனவே குப்பை தொட்டிகளை வைத்து, குப்பைகளை தினமும் சேகரித்து செல்ல வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-மணி, கீரனூர்.

சாக்கடை கால்வாய் தேவை
தேனி ஒன்றியம் நாகலாபுரத்தை அடுத்த சிவலிங்கநாயக்கன்பட்டி 1-வது வார்டு தெற்கு தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து தெருவில் செல்கிறது. இதன் காரணமாக மக்கள் நடமாட முடியாத அளவுக்கு தெரு மோசமாக உள்ளது. எனவே, சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும். 
-ராஜா, தேனி.

Next Story