நாமக்கல் மாவட்டத்தில் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா-பக்தர்கள் சாமி தரிசனம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
காளிப்பட்டி கந்தசாமி கோவில்
முருகப்பெருமான் சூரபத்மனை வென்று தேவர்களை காத்த நிகழ்வு, ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலிலும் நேற்று நடைபெற்றது.
சூரசம்ஹார நிகழ்ச்சியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு திரண்டனர். இதையடுத்து மாலை 4.30 மணியளவில் தொடங்கிய சூரசம்ஹாரம் 2 மணி நேரம் நடந்தது. சூரன், யானை, சிங்கம், ஆட்டுக்கிடா ஆகிய அவதாரங்களில் மாறி மாறி வேடமிட்டு சென்று முருகனிடம் சண்டையிடும் காட்சியை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
சூரசம்ஹாரம்
காளிப்பட்டி, ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், திருச்செங்கோடு, சங்ககிரி, மோர் பாளையம், மங்களம், சந்திரம் பாளையம், உள்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சூரசம்ஹாரத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த நெல், கடலைக்காய் தட்டைப்பயிறு, பச்சை பயறு, சிறுதானியங்களை சூரன் மீது வீசினர். தொடர்ந்து சூரனை கந்தசாமி சிறப்பு அலங்காரத்தில் தோன்றி வதம் செய்ததுடன், சூரசம்ஹாரம் நிறைவு பெற்றது.
இன்று (புதன்கிழமை) கோவில் வளாகத்தில் கந்தசாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வக்கீல் செல்வகுமார், செயல் அலுவலர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
நாமக்கல்
நாமக்கல்லில், மோகனூர் சாலை காந்திநகரில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்தது. இதையொட்டி காலையில் கோவிலில் கணபதி பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து சக்தி ஹோமமும், சுப்பிரமணியர் ஹோமமும் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும் மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.
பின்னர் பாலதண்டாயுதபாணி சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல் நேற்று மாலையில் பாலதண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சியும், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மோகனூர்
மோகனூர் காந்தமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, சூரசம்ஹாரம் கோவில் வளாகத்திற்குள் நடைபெற்றது. முன்னதாக மூலவர் முருகப்பெருமானுக்கு பல வகை வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், நடைபெற்றது. தொடர்ந்து, தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் காலை முதல் தரிசனம் செய்தனர். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சூரசம்ஹார நிகழ்வு கோவிலின் உட்பிரகாரத்தில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடந்தது.
Related Tags :
Next Story