ராமேசுவரத்தில் விடிய விடிய பலத்த மழை


ராமேசுவரத்தில் விடிய விடிய பலத்த மழை
x
தினத்தந்தி 9 Nov 2021 11:56 PM IST (Updated: 9 Nov 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் பகுதியில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. பாம்பனில் கடல் சீற்றமாக காணப்பட்டது. படகுகளை கரையேற்றும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

ராமேசுவரம், 

ராமேசுவரம் பகுதியில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. பாம்பனில் கடல் சீற்றமாக காணப்பட்டது. படகுகளை கரையேற்றும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். 

விடிய விடிய மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. 
இதனிடையே வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழையானது இடைவிடாமல் தொடர்ச்சியாக பெய்தது. நேற்று காலை 9 மணி வரையிலும் மழை பெய்தது. அதன் பின்னர் லேசான சாரல் மழையாக இருந்தது. தொடர் மழையால் ராமேசுவரம் ராமதீர்த்தம் முதல் சீதா தீர்த்தம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. 
மழை நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்துல் கலாம் மணிமண்டபம் முன்பும் சாலையோரத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

கடல் சீற்றம்

இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் இரவு முதல் நேற்று காலை வரையிலும் மழை பெய்தது. பாம்பன் பகுதியில் நேற்று பகல் 11 மணிக்கு பிறகு வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீச தொடங்கியதுடன் கடல் சீற்றம் அதிகமாகவே இருந்தது. இதனால் வடக்கு மற்றும் தெற்கு கடல்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி இருந்த நாட்டுப் படகு மற்றும் பைபர் படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக கரையில் ஏற்றி வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதன் எதிரொலியாக கடலுக்கு செல்ல தடை உள்ளதால் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story