பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ 6½ லட்சம் அபேஸ்


பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து  ரூ 6½ லட்சம் அபேஸ்
x
தினத்தந்தி 9 Nov 2021 11:57 PM IST (Updated: 9 Nov 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

வங்கி கணக்குடன் பான் கார்டு எண்ணை இணைப்பதாக கூறி வேலூரை சேர்ந்த பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.6 லட்சத்து 56 ஆயிரத்தை மர்மநபர்கள் அபேஸ் செய்துள்ளனர்.

வேலூர்

வங்கி கணக்குடன் பான் கார்டு எண்ணை இணைப்பதாக கூறி வேலூரை சேர்ந்த பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.6 லட்சத்து 56 ஆயிரத்தை மர்மநபர்கள் அபேஸ் செய்துள்ளனர்.

குறுந்தகவல்

வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் வசந்தகுமாரி (வயது 61). இவருடைய மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். வசந்தகுமாரியின் செல்போன் எண்ணுக்கு வங்கியில் இருந்து அனுப்புவது போல ஒரு குறுந்தகவலை மர்மநபர்கள் அனுப்பி உள்ளனர். அதில் உங்களுடைய வங்கிக் கணக்குடன், பான் கார்டு எண் இணைக்கப்படாமல் உள்ளது.
எனவே உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்தால் அதனை இணைத்து விடலாம் என குறிப்பிட்டிருந்தனர். மேலும் அவர்கள் தமிழகத்தில் உள்ள ஒரு வங்கியின் போலி வலைதள முகவரியை வசந்தகுமாரி செல்போன் எண்ணுக்கு அனுப்பினர். இதைநம்பிய வசந்தகுமாரி அவருடைய வங்கிக் கணக்கு விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்தார். மேலும் செல்போன் எண்ணையும் அதில் பதிவு செய்தார்.

ரூ.6½ லட்சம் அபேஸ்

இதனைத்தொடர்ந்து வசந்தகுமாரியை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் நான் வங்கி மேலாளர் பேசுவதாக கூறி அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ந்து, மர்மநபர் உங்கள் செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. எண்கள் வரும். அதனை எங்களுக்கு தெரிவித்தால் உடனடியாக உங்கள் கணக்கில் பான் கார்டு எண்ணை இணைத்து விடுவோம் என்று கூறினார். அதன்படி செல்போனுக்கு வந்த எண்ணையும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மர்மநபர்கள், அவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.6 லட்சத்து 56 ஆயிரத்தை எடுத்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த வசந்தகுமாரி வங்கிக்கு தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படுவது குறித்து தகவல் தெரிவித்தார். பின்னர் வங்கி அதிகாரிகள் தெரிவிக்கவே தான் மர்மநபர்களிடம் ஏமாந்தது அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story