எருமப்பட்டி அருகே வேலை செய்த இடத்தில் கைவரிசை: ரிக் வண்டி அலுவலகத்தில் ரூ.3¾ லட்சத்தை திருடிய வடமாநில கும்பல் கைது


எருமப்பட்டி அருகே வேலை செய்த இடத்தில் கைவரிசை: ரிக் வண்டி அலுவலகத்தில் ரூ.3¾ லட்சத்தை திருடிய வடமாநில கும்பல் கைது
x
தினத்தந்தி 10 Nov 2021 12:03 AM IST (Updated: 10 Nov 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி அருகே வேலை செய்த ரிக் வண்டி அலுவலகத்தில் ரூ.3¾ லட்சத்தை திருடி கைவரிசை காட்டிய வட மாநில கும்பலை போலீசார் கைது செய்தனர்.

எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே வேலை செய்த ரிக் வண்டி அலுவலகத்தில் ரூ.3¾ லட்சத்தை திருடி கைவரிசை காட்டிய வட மாநில கும்பலை போலீசார் கைது செய்தனர்.
வடமாநில தொழிலாளர்கள்
எருமப்பட்டி அருகே உள்ள சிங்களங்கோம்பையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 33). இவர் பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி பொன்னேரி கைகாட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பங்குதாரராக உள்ளார். இவர் ஆழ்துளை கிணறு (போர்வெல்) அமைக்கும் நிறுவனமும் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ரிக் வண்டியில் கடந்த 4 மாதங்களாக சத்தீஷ்கார் மாநிலத்தைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில் பொன்னேரி கைகாட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் பின்புறம் ரிக் வண்டியை நிறுத்தி விட்டு வடமாநில தொழிலாளர்கள் 9 பேரும் தங்கி இருந்துள்ளனர். கடந்த 7-ந் தேதி காலையில் ராஜேஷ், பெட்ரோல் விற்பனை நிலையம் பின்புறம் உள்ள தனது ரிக் வண்டி அலுவலகத்துக்கு வந்தார். 
ரூ.3¾  லட்சம் திருட்டு
அங்கு ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டு இருப்பதை கண்டு அலுவலகத்திற்குள் சென்று பார்த்தார். அங்கு டேபிளின் பூட்டை உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
அப்போது அவர் அந்த அலுவலகம் அருகே ரிக் வண்டியில் இருந்த சத்தீஷ்கார் மாநில தொழிலாளர்கள் 9 பேர் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தான் பணத்தை திருடிச்சென்று இருக்கலாம் என்று கருதி எருமப்பட்டி போலீசில் புகார் செய்தார். 
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தப்பிஓடிய வடமாநில தொழிலாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த கும்பல் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்கள் 9 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
9 பேர் கைது
விசாரணையில் அவர்கள் சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த விமல் யாதவ் (22), சேசன்தர்வோ (27), பிரதீப் (22), சஞ்சய் குமார் (19), ஜீதகமார் சூரி (20), தோவானாந்த் (23), துளசிநாத் (22), நாதாலாந்தீம் (28), லட்சுமண சின்னா (20) ஆகியோர் என்பதும், அவர்கள் தான் ராஜேஷின் அலுவலகத்தில் பணத்தை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கத்தையும் போலீசார் மீட்டனர்.

Next Story