‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ்நிலையத்தில் போக்குவரத்து நெரிசல்
தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அதிகாலை முதல் நள்ளிரவு வரை தினமும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் டவுன் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள். இந்த பஸ் நிலையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை பல இடங்களில் நிறுத்தி உள்ளனர். இதேபோல் பஸ்களை நிறுத்தும் இடத்திலும் பிற வாகனங்களின் ஆக்கிரமிப்பு உள்ளதால் பஸ் நிலையத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே டவுன் பஸ் நிலையத்தில் பஸ்களை தவிர, இருசக்கர வாகனஙகள் மற்றும் பிற வாகனங்கள் நிறுத்தி போக்குவரத்து இடையூறு செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தினேஷ், தர்மபுரி.
========
வேகத்தடை பகுதியில் விபத்து அபாயம்
பாப்பாரப்பட்டி- பாலக்கோடு சாலையில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. இந்த சாலையை கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் பகுதிகளில் இருந்து ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாலையில் கிட்டம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் 2 இடங்களில் புதிதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் சாலையில வெள்ளை நிற கோடுகள் போடப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் இந்த பகுதியில் வேகத்தடை இருப்பதை சரியாக கவனிக்காமல் பல வாகனங்கள் வேகத்தடையை கடந்து செல்லும் போது வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளன. எனவே இந்த பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் அங்கு சிக்னல் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனியப்பன், பாப்பாரப்பட்டி.
===
பழுதான சாலை சீரமைக்கப்படுமா ?
நாமக்கல் ரெயில் நிலையம், சேந்தமங்கலம் சாலையில் அமைந்து உள்ளது. இங்கு துறையூர் சாலை மற்றும் அதையொட்டி உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எளிதில் சென்று வருவதற்கு வசதியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொசவம்பட்டி ஏரிக்கரை வழியாக இணைப்பு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த சாலையை ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். சிறு, சிறு விபத்துகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கர், நாமக்கல்.
=====
தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்
சேலம் அழகாபுரம் காட்டூரில் மோளப்பட்டியான் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் கடந்த சில மாதங்களாக தூர்வராப்படாமல் உள்ளது. இதனால் இந்த கால்வாய்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தற்போது மழைகாலம் என்பதால் சாக்கடை நீருடன் மழைநீரும் சேர்ந்து கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக இந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோவிந்தன், அழகாபுரம், சேலம்.
சேலம் மாநகரில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் சாக்கடை கால்வாய்களில் குப்பைகள் மற்றும் கழிவுபொருட்கள் அடைத்து விடுகின்றன. இதனால் சாக்கடைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் செல்வதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்கள், வாகனஓட்டிகள் சாலைகளில் செல்வதற்கு சிரமப்படுகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய்களை முழுமையாக தூர்வார வேண்டும்.
-வேலாயுதம், சேலம்.
=====
சேதமடைந்த சாலை
சங்ககிரி தேவண்ணகவுண்டனூரில் மோளப்பறைக்காடு உள்ளது. இங்குள்ள சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்த முடியாத நிலையில் இந்த சாலை உள்ளது. மேலும் சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குளியுமாக காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், தேவண்ணகவுண்டனூர், சங்ககிரி.
மேச்சேரியில் இருந்து தொப்பூர் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமான காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கிடையே சாலையில் பயணிக்கின்றனர். தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ- மாணவிகள் சாலையில் செல்லவே அச்சப்படுகிறார்கள். இதுதொடர்பாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், மேச்சேரி.
======
சேலம் மாநகராட்சி 35-வது வார்டு, கார்பெட் தெரு, மெயின் ரோடு, தம்பி காளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன. 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலை அப்படியே காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தற்போது மழை காலம் என்பதால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலைகளில் செல்லவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து பணியை முடிக்க வேண்டும்
-வணங்காமுடி, பொன்னம்மாபேட்டை, சேலம்.
Related Tags :
Next Story