புதுக்கோட்டை மாவட்டத்தில் இடைவிடாமல் மழை


புதுக்கோட்டை மாவட்டத்தில் இடைவிடாமல் மழை
x
தினத்தந்தி 10 Nov 2021 1:17 AM IST (Updated: 10 Nov 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் இடைவிடாமல் மழை பெய்தது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினமும் அதிகாலை மழை பெய்தது. அதன்பின் பகலில் மழை இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி, வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. 
இந்தநிலையில் புதுக்கோட்டையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 7.45 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து இடைவிடாமல் ஒரே சீராக பெய்தது. காலையில் மழை பெய்ய தொடங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். அதன்படி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. சிறிது நேரத்திற்கு பிறகு கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டன. இதன் காரணமாக கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியும், குடையை பிடித்தப்படியும் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
புதுக்கோட்டையில் நேற்று காலை முதல் இடைவிடாமல் பெய்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமல் முடங்கினர்.  இதேபோல மாவட்டத்தில் இடைவிடாமல் மழை பெய்தது. கடலோர பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
மழையின் காரணமாக இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டுள்ளார். மழையினால் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மக்கள் பிரதிநிதிகளும், உள்ளாட்சி அமைப்பினரும் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.


Next Story