பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி பகுதிகளில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு
பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி பகுதிகளில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு
சேலம், நவ.10-
மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி பகுதிகளில் நேற்று கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் 119 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பூலாம்பட்டியில் காவிரி கரையோர பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கலாம். எனவே காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் உள்ளார்களா? என வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை மற்றும் அரசு அலுவலர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் காவிரி கரையோரங்களில் தடுப்புகள் ஏற்படுத்தி, எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன என்றார்.
இந்த ஆய்வின் போது சங்ககிரி உதவி கலெக்டர் வேடியப்பன், எடப்பாடி தாசில்தார் விமல் பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், துணை தாசில்தார் மகேந்திரன், வருவாய் ஆய்வாளர் வனஜா, வேளாண்மை உதவி இயக்குனர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி ஆகியோர் உடன் இருந்தனர்.
கோனேரிப்பட்டி
இதைத்தொடர்ந்து கோனேரிப்பட்டி நீர்மின் தேக்க கதவணை பகுதியை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேலும் காவிரி கரையோர மக்களுக்கு, ஆற்றில் அதிகபடியான தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுரை கூறினார். மேலும் வருவாய்த்துறையினர் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுரை கூறினார்.
ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் சத்யராஜ் உள்பட வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story