மழையால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ரூ.91 கோடி ஒதுக்கீடு
குமரி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ரூ.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
கொல்லங்கோடு,
குமரி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ரூ.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு
குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதங்களை தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்சிறை ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்காடு, பருத்திக்கடவு, வைக்கல்லூர் மற்றும் பேச்சிப்பாறை அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர் நேரில் சென்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
ரூ.91 கோடி ஒதுக்கீடு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க குமரி மாவட்டத்தில் இயற்கை பேரிடர் தொடர்பான நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்தாலும், அதை எதிர்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மேலும் பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகள் அனைத்தும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேரிடர் மீட்பு பணிக்காக மாநில பேரிடர் மீட்பு துறையினர் 120 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று குமரி மாவட்ட காவல்துறையினரும், தீ அணைப்பு படையினரும், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தற்போது குமரி மாவட்டத்தில் உள்ள மழை சேதங்களை சீரமைக்க ரூ.91 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
தமிழக முதல்வர் தலைமையிலான அமைச்சரவையின் கீழ் உள்ள அமைச்சர்கள் வந்தார்கள். பார்த்து பிச்சினைக்கு உரிய தீர்வு கண்டார்கள் என்றுதான் இருக்கும். நானும், பேரிடர் மேலாண்மை சார்ந்த வருவாய்த்துறை அமைச்சரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினோம் அரசு எந்திரங்கள் முழுமையாக முடக்கிவிடபட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. யாரெல்லாம் மனுக்கள் வழங்கி உள்ளனரோ அவர்களுக்கு நிச்சயமாக நிவாரண நிதி வழங்கப்படும். ஆற்றின் கரையோரம் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சாக்கு மூடைகளை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தடுப்புச்சுவர்
வரும் காலங்களில் ஆற்றின் கரையோரம் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 600 மீட்டர் தூரத்திற்கு தடுப்புச்சுவர் அமைப்பதற்கான வரைவு ஏற்படுத்தப்பட்டு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மழையால் சாலை, ஓடைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதம் அடைந்து உள்ளன.
மாநில அரசு அதற்கான நிதியை ஒதுக்கிய உடன் அனைத்தும் சீரமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
ஆய்வில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலர்மேல்மங்கை, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கிள்ளியூர் தாசில்தார் ஜூலியன், முன்சிறை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மோகன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் அப்துல் ரகுமான், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராபி, ஏழுதேசம் பேரூர் செயலாளர் தாஸ், நீரோடி ஜோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story