பொய்கை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
முழு கொள்ளளவை எட்டிய பொய்கை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
ஆரல்வாய்மொழி,
முழு கொள்ளளவை எட்டிய பொய்கை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
பொய்கை அணை
ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன் புதூரில் பொய்கை அணை உள்ளது. இந்த அணை கடந்த 2000-வது ஆண்டில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. அணையில் மொத்த கொள்ளளவு 42.65 அடி ஆகும்.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த மழையால் பொய்கை அணை முழு கொள்ளளவான 42.65 அடியை எட்டியது. இந்த அணை கடந்த 21 ஆண்டுகளில் முதல் முறையாக முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்து வருகிறது.
அணை திறப்பு
இந்தநிலையில் முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் மேட்டு கால் மதகை திறப்பதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நேற்று பாசனத்துக்காக மேட்டுக்கால் மதகு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் தமிழக சபாநாயகர் அப்பாவு அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீரை திறந்துவிட்டார். அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதகுகள் வழியாக கால்வாயில் சீறிப்பாய்ந்தது. அப்போது, சீறிப்பாயந்த தண்ணீர் மீது மலர் தூவி மகிழ்ந்தனர்.
கலந்துகொண்டார்கள்
நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ், ஞானதிரவியம் எம்.பி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, பொறியாளர் அருள்சன் பிரைட், உதவி பொறியாளர் வின்ஸ்டன் லாரன்ஸ், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பக்தர்கள் சங்க தலைவர் முத்துக்குமார், தோவாளை ஒன்றிய தி.மு.க.செயலாளர் நெடுஞ்செழியன், ஆரல்வாய்மொழி பேரூர் தி.மு.க.செயலாளர் சுப்பிரமணியன், செண்பகராமன்புதூர் பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் தேவதாஸ், தோவாளை முத்துசாமி, தி.மு.க.மாவட்ட பிரதிநிதிகள் லாரன்ஸ், நாகராஜன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
8 குளங்கள்
பின்னர் நிருபர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:- கடந்த 1996-ம் ஆண்டு இந்த அணை அடிக்கல் நாட்டப்பட்டது. 2000-வது ஆண்டில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. அவரால் திறக்கப்பட்ட அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது, மேட்டுக்கால் மதகு திறக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள 8 குளங்கள் நிரம்பி பாசன வசதி பெறும் என்றார்.
Related Tags :
Next Story