கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் முதன்மை செயலாளர் டாக்டர் பீலாராஜேஷ் நேரில் ஆய்வு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் முதன்மை செயலாளர் டாக்டர் பீலாராஜேஷ் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 10 Nov 2021 10:17 AM IST (Updated: 10 Nov 2021 10:17 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசின் முதன்மை செயலாளர் டாக்டர் பீலாராஜேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசின் முதன்மை செயலாளர் டாக்டர் பீலாராஜேஷ் நேரில் ஆய்வு செய்தார்.
முதன்மை செயலாளர் 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில சீர்திருத்தத்துறை, அரசு முதன்மை செயலருமான டாக்டர் பீலாராஜேஷ் ஆய்வு செய்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி முன்னிலை வகித்தார். தொடர்ந்து திம்மாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் மீட்பு மையம் மற்றும் உணவு தயாரிக்கும் கூடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் அவதானப்பட்டி படகு இல்லத்தில் தீயணைப்புத்துறை வீரர்கள் பேரிடர் மீட்பு காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்து நடைபெற்ற செயல்விளக்க நிகழ்ச்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலாராஜேஷ் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாதிப்பு ஏற்படும் பகுதிகள் 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படக்கூடிய 35 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று அவர்களை தங்க வைப்பதற்காக 47 மீட்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மீட்பு மையங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் நீர் நிரம்பி உடைப்பு ஏற்படாத வகையில் தடுப்பதற்கு மாவட்டத்தில் போதிய அளவில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 
மாவட்டத்தில் தீயணைப்புத்துறை சார்பில் இதுவரை 70 பேரிடர் செயல்விளக்க பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. 2,054 மீட்பு முன்கள பணியாளர்கள், பொக்லைன் எந்திரங்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள் மற்றும் பணியாளர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆறு, ஏரி, குளங்களுக்கு செல்வதை தவிர்த்தும், கால்நடைகள் நீர்நிலைகளை கடந்து செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மாவட்ட வனஅலுவலர் கார்த்திகேயணி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், உதவி கலெக்டர்கள் தேன்மொழி (ஓசூர்), சதீஷ்குமார் (கிருஷ்ணகிரி), நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், கிருஷ்ணகிரி தாசில்தார் சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story