‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மழைவெள்ள பாதிப்பும்.., கழிவுநீர் அடைப்பும்...
சென்னையில் மழைவெள்ளம் மெல்ல, மெல்ல வடிந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு அடையும் வேளையில், கழிவுநீர் அடைப்பு பிரச்சினை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அமைந்துள்ளது. அம்பத்தூர் கருக்கு சாஸ்தா நகர், மாதவி தெரு, நெற்குன்றம் ரெட்டி தெரு, வேளச்சேரி புதிய தலைமை செயலக காலனி 2-வது தெரு, கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனி, தரமணி எம்.ஜி.ஆர். நகர், காட்டுப்பாக்கம் ஜானகி நகர் 2-வது தெரு, வேப்பேரி சம்பத் சாலை, வண்டலூர் உயிரியல் பூங்கா ஓட்டேரி விரிவாக்கம் 5-வது மெயின் ரோடு உள்பட பல இடங்களில் கழிவுநீர் அடைப்பு பிரச்சினை மக்களை பெருந்துயரில் ஆழ்த்தி உள்ளது. கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதார சீர்கேடு பிரச்சினை தலைதூக்கி உள்ளது. துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீரகற்று வாரிய ஊழியர்கள் எங்கெங்கு கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது? என்பதை களஆய்வு மூலம் கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கழிவுநீர் பிரச்சினையால் அவதியுறும் மக்கள்.
மின்வாரியம் துரிதம்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் மின்கம்பம் சாய்ந்து ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை பாதுகாப்பாக நட்டு வைத்துள்ளனர். இதற்காக ‘தினத்தந்தி’க்கும், மின்வாரியத்துக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
திறந்து கிடக்கும் மின் இணைப்பு பெட்டி
சென்னை யானைக்கவுனி ஜெசன் தெருவில் உள்ள மின் இணைப்பு திறந்தநிலையில் இருக்கிறது. மழை காலம் என்பதால் மின்கசிவு ஏற்பட்டால் விபரீதம் ஏற்பட்டுவிடும். எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
- பொதுமக்கள், யானைக்கவுனி.
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
சென்னை வில்லிவாக்கம் முதல் ஆவடி செல்லும் மார்க்கத்தில் பாடி பிரிட்டானியா பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்துக்கு பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் மழை காலத்தில் மழையிலும், வெயில் காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலிலும் பயணிகள் காத்திருக்கும் அவலநிலை இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் களஆய்வு மேற்கொண்டு பஸ்நிறுத்தம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
-பயணிகள்.
கரடு-முரடான சாலையால் அவதி
சென்னை சோழிங்கநல்லூர் முதல் மேடவாக்கம் மெயின் ரோடு வீராத்தம்மன் கோவில் ரோடு கரடு-முரடாகவும், குண்டும், குழியுமாகவும் இருக்கிறது. இந்த சாலையில் மிகுந்த சிரமத்துக்கு இடையே பயணிக்க வேண்டி இருக்கிறது. எனவே இந்த சாலை சீரமைத்து தரப்படுமா?
- முகமது அஸ்லம், சமூக ஆர்வலர்.
இருள் சூழ்ந்த தெரு
செங்கல்பட்டு மாவட்டம் கவுரிவாக்கம் சாந்தி நகர் குறுக்கு தெருவில் உள்ள அனைத்து தெருவிளக்குகளும் நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது. சாலையும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் இருள் சூழ்ந்த பகுதியில் நடந்து செல்லும்போது தடுமாறும் நிலை உள்ளது. எனவே பழுதான மின்விளக்குகளை மாற்றிவிட்டு புதிய மின்விளக்குகளை பொறுத்தி, இப்பகுதிக்கு வெளிச்சம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.
- பிரபாகர், கவுரிவாக்கம்.
மூடிக்கிடக்கும் பாலூட்டும் அறை
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா புதிய பஸ் நிலையத்தில் உள்ள அம்மா தாய்மார்கள் பாலூட்டும் அறை தொடர்ந்து மூடப்பட்டு உள்ளது. இதனால் இந்த பஸ் நிலையத்துக்கு வரும் தாய்மார்கள் பச்சிளங் குழந்தைகளுக்கு திறந்தவெளியில் தயக்கத்துடன் பாலூட்டும் நிலைமை உள்ளது. எனவே மூடிக்கிடக்கும் பாலூட்டும் அறை திறக்கப்படுமா?
- பெண் பயணிகள்.
போக்குவரத்து சிக்னல் வேண்டும்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்கொளத்தூர் பஸ் நிலையத்தில் சாலையை கடப்பது மிகுந்த சிரமமாக இருக்கிறது. வாகனங்கள் வேகமாக வருவதால் உயிரை கையில் பிடித்து கொண்டு சாலையை கடக்க வேண்டி உள்ளது. எனவே இப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைத்து தர வேண்டும் அல்லது போக்குவரத்து போலீஸ்காரரை பணி அமர்த்த வேண்டும்.
-டி.சஞ்சய் கண்ணா, பள்ளி மாணவன்.
சாலை வசதி தேவை
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் பெருமாட்டுநல்லூர் ஊராட்சி ராஜாஜிநகரில் சாலை வசதி முறையாக இல்லாததால் ஒவ்வொரு வீட்டிலும் ரூ.1,000 வீதம் வசூல் செய்து சாலையை தற்காலிகமாக சீரமைத்து இருக்கிறோம். மழைக்காலம் முடிந்தவுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் தார் சாலை அல்லது சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.
-ராஜாஜி நகர் குடியிருப்போர் நல சங்கம்.
கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு
காஞ்சீபுரம் முக்கிய கடைவீதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக உலா வருகின்றன. சாலையின் நடுவில் அமர்ந்து ஒய்யாரமாக ஓய்வும் எடுக்கின்றன. இதனால் சில நேரங்களில் விபத்துக்கள் நடைபெறவும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து சென்று அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
-பொதுமக்கள், காஞ்சீபுரம்.
தினமும் குப்பைகள் அகற்றப்படுமா?
காஞ்சீபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் தாலுகா தண்டலம் கிராமம் குளக்கரை தெருவில் உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குப்பைகள் அகற்றப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் ஈ மற்றும் கொசுக்கள் அதிகளவில் மொய்க்கின்றன. எனவே தினமும் குப்பைகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், தண்டலம் கிராமம்.
Related Tags :
Next Story