தொடர் மழையால் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை சூழ்ந்த மழை நீர்
தொடர் மழையால் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை மழை நீர் சூழ்ந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை காரணமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக புகழ் பெற்ற பாரம்பரிய நினைவு சின்னமான கடற்கரை கோவில் வளாகத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததையடுத்து கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக கடற்கரை கோவில் வளாகத்தில் இடது பக்கம் உள்ள படகு துறையின் படிகட்டுகள் வரை 3 அடி ஆழத்திற்கு மழை நீர் நிரம்பிய நிலையில் அந்த பகுதி ரம்மியமாக காட்சி அளித்தது.
மேலும் கடற்கரை கோவிலின் வலது பக்கம் உள்ள அகழியில் 2 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கி, மழைநீரில் அந்த கோவிலின் 2 கருவறை கோபுரத்தின் நிழல் படிந்து பார்வையாளர்கள் ரசிக்கிற வகையில் அழகுற காட்சி அளித்தது.
மழையால் சுற்றுலா பயணிகள் வரத்து நேற்று அதிகம் காணப்படவில்லை. மழையால் புராதன சின்னங்களை கண்டுகளிக்கும் ஆன்லைன் டிக்கெட் பதிவு சேவையும் குறைவாக காணப்பட்டது.
பருவ மழை காலம் முடிந்த பிறகே சுற்றுலா பயணிகளின் வரத்தை எதிர்பார்க்கலாம் என்று சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவித்தனர். கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாததால் சுற்றுலா வழிகாட்டிகள், நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ, கார் டிரைவர்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாததால் அறைகள் முன் பதிவு செய்யப்படாததால் தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
Related Tags :
Next Story