நீலகிரியில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு
நீலகிரியில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு
ஊட்டி
நீலகிரியில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் இதுவரை 314 புகார்கள் பெறப்பட்டு உள்ளது.
பண மோசடி
நீலகிரி மாவட்டத்தில் ஆன்லைனில் பேசி மற்றவர்களை நம்ப வைத்து பண மோசடி, ஆசை வார்த்தை கூறி பணத்தை அபேஸ் செய்வது, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ரகசிய குறியீட்டு எண்ணை பெற்று பணத்தை எடுப்பது போன்ற சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு வரை சைபர் குற்றங்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் கோவையில் அளித்து வந்தனர். நடப்பாண்டு முதல் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் தொடங்கப்பட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் தொழில்நுட்ப சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். நேரடியாக மட்டுமின்றி ஆன்லைன் மூலமும் புகார்கள் பெறப்பட்டு வருகிறது.
நீலகிரியில் சமீபத்தில் ஒருவரை தொடர்பு கொண்ட நபர் உங்களுக்கு கடன் தருகிறோம் என்று கூறி வங்கிக் கணக்கு விவரங்களை பெற்றார். கடன் வழங்க குறிப்பிட்ட முன் வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்று தெரிவித்து ரகசிய குறியீட்டு எண்ணை பெற்று, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்தார். பின்னர் அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதேபோல் செல்போன் டவர் அமைப்பது, வேலை வாங்கி தருவது, ஆன்லைனில் பரிசுகள் விழுந்தது போன்ற ஆசை வார்த்தைகளை கூறி மக்களை ஏமாற்றும் செயல்கள் அரங்கேறி வருகிறது.
314 புகார்கள்
குறிப்பாக இளைஞர்கள் ஏமாந்து பணத்தை இழந்து விடுகின்றனர். இதனால் சைபர் கிரைம் பிரிவுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:- நீலகிரியில் நடப்பாண்டில் 314 புகார்கள் சைபர் கிரைம் பிரிவுக்கு வந்து உள்ளது. இதில் 201 புகார்களுக்கு முதல்கட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். பொதுமக்கள் விழிப்பாக இருப்பதோடு, வங்கி கணக்கு எண், ரகசிய குறியீடு எண்ணை யாரிடமும் தெரிவிக்க கூடாது.
ஒருவேளை மற்றவர்களிடம் ஏமாந்து தெரிவித்து வங்கி கணக்கில் இருந்து அதிக பணத்தை எடுத்து விட்டால், 155260 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். 24 மணி நேரத்துக்குள் தெரிவித்தால் அந்த பணம் திரும்ப வங்கி கணக்குக்கு வந்துவிடும். சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் விழிப்புணர்வு வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story