கிராமப்பகுதிக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்


கிராமப்பகுதிக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்
x
தினத்தந்தி 10 Nov 2021 6:04 PM IST (Updated: 10 Nov 2021 6:04 PM IST)
t-max-icont-min-icon

கிராமப்பகுதிக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

கோத்தகிரி


கோத்தகிரி அருகே கிராமப்பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அட்டகாசம் செய்ததோடு, வாழைகளை தின்றும், மிதித்தும் நாசம் செய்தது.

கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை

கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பணை சுற்றுவட்டார பகுதிகளில் பலாப் பழ சீசன் காரணமாக சமவெளிப் பகுதிகளில் இருந்து பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள், அப்பகுதியில் முகாமிட்டு இருந்ததுடன் சாலைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் தொடர்ந்து உலா வந்த வண்ணம் இருந்தன. 
ஆனால் அங்கிருந்து வழிதவறி சென்ற ஆண் காட்டு யானை ஒன்று நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் அளக்கரை கிராம குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. மேலும் அங்கு இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது. 

அட்டகாசம்

இதுகுறித்து 
தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். ஆனால் அதே காட்டு யானை இரவு 7 மணியளவில் எடப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்ததோடு, அங்குள்ள தபால் நிலையம் முன் நின்று கொண்டிருந்தது. 
இதனை கவனித்த பொதுமக்கள் கட்டபெட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் வனச்சரகர் செல்வகுமார், வனவர் பெலிக்ஸ், வனக்காப்பாளர் நாகேஷ் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டார்ச் லைட் வெளிச்சத்தின் உதவியுடன் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். 

தொடர் கண்காணிப்பு

சுமார் 12 மணி அளவில் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. வனப்பகுதிக்குள் சென்ற யானை மீண்டும் அளக்கரையில் உள்ள தனியார் எஸ்டேட் பகுதிக்குச் சென்று அங்கிருந்த வாழை மரங்களை மீண்டும் தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. எனவே வனத்துறையினர் நள்ளிரவு 2 மணிக்கு அப்பகுதிக்கு சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டியதுடன், யானை மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story