வழக்கை திரும்ப பெற வற்புறுத்தும் வனச்சரகர் மீது நடவடிக்கை
வழக்கை திரும்ப பெற வற்புறுத்தும் வனச்சரகர் மீது நடவடிக்கை
கூடலூர்
குடியமர்வு திட்டம் தொடர்பாக வழக்கை திரும்ப பெற வற்புறுத்தும் வனச்சரகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடலூர் ஆர்.டி.ஓ. விடம், மச்சிக்கொல்லி ஆதிவாசி மக்கள் புகார் மனு கொடுத்தனர்.
ஆர்.டி.ஓ.விடம் மனு
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சிக்கொல்லி, பேபி நகர் பகுதியை சேர்ந்த ஆதிவாசி மக்கள் நேற்று காலை 10.30 மணிக்கு கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்து நேர்முக உதவியாளரிடம் புகார் மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது:-
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள புலியாளம் கிராமத்தில் வசித்த எங்களை மாற்று குடியமர்வு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்குவதாக கூறினர். முதற்கட்டமாக ரூ.7 லட்சம் மட்டுமே வங்கி மூலம் கொடுக்கப்பட்டது. இதனால் அந்த பணத்தை கொண்டு பட்டா இல்லாத அரசு நிலத்தை வாங்கி வனத்துறையினர் எங்களிடம் ஒப்படைத்து ஏமாற்றினர். இதுதொடர்பாக ஊட்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் கடந்த 2019-ம் ஆண்டு புகார் கொடுத்தோம். அதன்படி பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது.
ரூ.3 லட்சம் கிடைக்க நடவடிக்கை
இந்த நிலையில் எங்களுக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள ரூ.3 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதைப் பெறுவதற்காக கடந்த 28-10- 2021 அன்று கூடலூரில் உள்ள ஒரு வங்கியில் சென்று கேட்டபோது முதுமலை வனச்சரகரிடம் முறைப்படி கடிதம் வாங்கிக் கொண்டு வந்தால் பணம் வழங்குவதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வனச்சரகர் மனோகரனிடம் சென்று கேட்டபோது வனத்துறையினர் மீதும் மற்றவர்கள் மீதும் போட்டுள்ள வழக்கை நீங்கள் அனைவரும் திரும்பப் பெற வேண்டும்.
இல்லையெனில் உங்களுக்கு கிடைக்கவேண்டிய ரூ.3 லட்சம் கிடைக்காது என்று கூறினார். எனவே மாற்று குடியமர்வு திட்டத்தின் கீழ் எங்களுக்கு வழங்கவேண்டிய வைப்பு தொகையாக வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.3 லட்சம் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட வனச்சரகர் மனோகரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வனச்சரகர் விளக்கம்
இதுகுறித்து வனச்சரகர் மனோகரனிடம் கேட்டபோது, வங்கியில் வைப்பு தொகையாக வைக்கப்பட்டுள்ள பணத்தை எடுத்து தர வேண்டும் என 16 ஆதிவாசி குடும்பத்தினர் கேட்டனர். அப்போது ஆர்.டி.ஓ. தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தேன். ஆர்.டி.ஓ.வும் அவர்களுக்கு பணம் கிடைக்க உத்தரவிட்டார். மேலும் ஆதிவாசி மக்கள் வசிக்கும் இடம் அரசு நிலம் என்பதால் அதற்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தான் பணியிட மாறுதலாகி வந்துள்ளேன். முறைகேடு வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் ஏன் ஆதிவாசி மக்களிடம் பணம் தரமுடியாது என கூறுவேன். மேலும் 2 குடும்பத்திற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள குடும்பங்களுக்கு பணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story