இரட்டை மாட்டுவண்டி பந்தயம்


இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
x
தினத்தந்தி 10 Nov 2021 6:31 PM IST (Updated: 10 Nov 2021 6:31 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

கூடலூர்:

கூடலூர் தம்மணம்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நேற்று நடந்தது. இதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஒக்கலிகள் (காப்பு) மகாஜன சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் முன்னிலை வகித்தார். 

இந்த போட்டியை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி  வைத்தார். முன்னதாக போட்டியில் பங்கேற்க இருந்த காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

 இதைத்தொடர்ந்து போட்டி தொடங்கியது. தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் மாடு, நடுமாடு, பெரிய மாடு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது. இதில் தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 110 பேர் மாட்டுவண்டி, காளைகளுடன் பங்கேற்றனர்.

காளைகளின் வயது, தூரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை, நினைவு கோப்பைகள் வழங்கப்பட்டன. 

அதன்படி மொத்தம் 20 பேர் பரிசுகளை பெற்றனர். குறிப்பாக பெரியமாடு பிரிவுக்கு அதிகபட்சமாக கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் வரை தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் கூடலூரை சேர்ந்த முகுந்தனின் காளை முதலிடத்தை பிடித்தது. 

மதுரை மாவட்டம் ஆணையூர் செல்வம் என்பவரின் காளைக்கு 2-வது இடமும், சின்னமனூர் தங்கம் ரேடியோஸ் 3-வது இடமும், கம்பம் நாட்டாண்மை தவமணி என்பவரது காளைக்கு 4-வது இடமும் கிடைத்தன. இவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.30 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. 

கூடலூர்-லோயர்கேம்ப் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த போட்டியில்  மாட்டுவண்டிகளுடன் சீறிப்பாய்ந்த காளைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

Next Story