தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று 3வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை


தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று 3வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 10 Nov 2021 7:41 PM IST (Updated: 10 Nov 2021 7:41 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று 3வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

தூத்துக்குடி:
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் விசைப்படகு மீனவர்கள் நேற்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆனால் தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக மிதமான மழையே பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுழல் காற்றானது 40-50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வேகத்துடன் தெற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதியில் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் கடந்த திங்கள்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ள மீனவர்கள் மீன்பிடி படகுகளில் கரைக்கு திரும்ப வருமாறு அறிவுறுத்தி இருந்தது. 
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
அதுபோல் மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது.
இதன்படி தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் 3-வது நாளாக நேற்றும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மேலும் விசைப் படகுகள் அனைத்தும் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Next Story