தலைஞாயிறு அருகே மல்லியனாற்றில் உடைப்பு; 5 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மூழ்கின
தலைஞாயிறு அருகே மல்லியனாற்றில் உடைப்பு ஏற்பட்டதால் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மூழ்கின.
வாய்மேடு:-
தலைஞாயிறு அருகே மல்லியனாற்றில் உடைப்பு ஏற்பட்டதால் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மூழ்கின.
ஆற்றில் உடைப்பு
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள ஓரடியம்புலம், மணக்குடி, வாட்டாகுடி, உம்பளச்சேரி, துளசாபுரம், மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தலைஞாயிறு பகுதியில் 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இந்த நிலையில் தலைஞாயிறு அருகே ஓரடியம்பலத்தில் ஓடும் மல்லியனாற்றில் நேற்று உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆற்றில் இருந்து தண்ணீர் வெளியேறி தலைஞாயிறு, வாட்டாகுடி, உம்பளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்களுக்குள் புகுந்து 5 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
சீரமைக்கும் பணி
இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் அங்கு சாலைகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது.
தொடர்ந்து மழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டு இருப்பதால் நெற்பயிர்கள் மேலும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர். தலைஞாயிறு பகுதியில் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தலைஞாயிறு பகுதியில் பாயும் அரிச்சந்திராஆறு, அடப்பாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
Related Tags :
Next Story