ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது


ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது
x
தினத்தந்தி 10 Nov 2021 10:03 PM IST (Updated: 10 Nov 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது

முத்தூர்
 நொய்யல் ஆற்றில் இருந்து கரூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
ஆத்துப்பாளையம் தடுப்பணை
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள சின்னமுத்தூரில் தமிழக அரசு பொதுப்பணித்துறை சார்பில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கடந்த 1992-ம் ஆண்டு ரூ 13 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிதாக தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையில் இருந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா க.பரமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட கார்வழி ஊராட்சி ஆத்துப்பாளையம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக பிரதான கால்வாய் வெட்டப்பட்டு அங்கேயும் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது.
இதனால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசன வசதி பெறும்.
நொய்யல் ஆற்றில் வெள்ளம்
 கோவையில் இருந்து நொய்யல் ஆற்றில் வரும் மழைநீர் திருப்பூர் வழியாக ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு வந்து சேர்கிறது. இந்த நிலையில் நொய்யல் ஆற்றில் திடீரென்று மழை நீர் வெள்ளம் அதிக அளவில் அதிகரித்து வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் கடந்த 4 நாட்களாக அப்படியே அதிக அளவிலான மழை நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் மழைநீர் வெள்ளப்பெருக்கு செந்நிறத்தில் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் கரூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் தடுப்பணை சுற்றுவட்டார பகுதி பாசன விவசாயிகள் சின்னமுத்தூர் நொய்யல் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின்படி காங்கேயம் கோட்ட, முத்தூர் உட்கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போது சின்னமுத்தூர் நொய்யல் தடுப்பணையில் பிரதான 9 மதகுகளில் 5 மதகுகளை அடைத்து ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு தண்ணீர் திறந்து விட்டு உள்ளனர். 
மேலும் ஆத்துப்பாளையம் தடுப்பணை தனது முழு கொள்ளளவான 18 அடி நிரம்பும் வரையிலும் அல்லது நொய்யல் ஆற்றில் மழைநீர் வெள்ளப்பெருக்கு செல்லும் வரையிலும் இதில் எது முதலில் நிறைவு பெறுகிறதோ அதுவரை நொய்யல் தடுப்பணையில் இருந்து ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Next Story