1½ ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது


1½ ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது
x
தினத்தந்தி 10 Nov 2021 10:46 PM IST (Updated: 10 Nov 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

பயணிகள் மகிழ்ச்சி

விழுப்புரம், 

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு தினமும் காலை 6 மணி, மதியம் 2.45 மணி, மாலை 6 மணிக்கும், அதுபோல் மறுமார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு காலை 6 மணி, மதியம் 2.45 மணி, மாலை 6 மணிக்கும் பயணிகள் ரெயில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ரெயிலின் சேவையும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே இயக்கப்பட்டு வந்த ரெயில் சேவையை மீண்டும் இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதோடு ஏற்கனவே பயணிகள் ரெயிலாக தினமும் 3 முறை இயக்கப்பட்டு வந்த ரெயில் சேவை நவம்பர் 10-ந் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரெயிலாக தினமும் ஒரு முறை இயக்கப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி 1½ ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே நேற்று முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. விழுப்புரம் ரெயில் நிலைய 3-வது நடைமேடையில் இருந்து நேற்று காலை 6 மணியளவில் 7 பெட்டிகளுடன் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் மயிலாடுதுறைக்கு காலை 9.10 மணிக்கு சென்றடைந்தது. இதேபோல் மறுமார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்ட ரெயில் விழுப்புரத்திற்கு இரவு 9.10 மணிக்கு வந்தடைந்தது. விழுப்புரம்- மயிலாடுதுறை மார்க்கத்தில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Next Story