விழுப்புரம்-கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்த்த கன மழை விளை நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழையினால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் விளை நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விழுப்புரம்,
விடிய, விடிய மழை
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இந்தநிலையில் விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 10 மணியில் இருந்து சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரமாக தூறிக்கொண்டே இருந்த நிலையில் 11 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழையாக பெய்யத்தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய வெளுத்து வாங்கியது.
பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர்ந்து நேற்று காலையிலும் நீடித்த மழை 10 மணி வரை இடைவிடாது பெய்து, அதன் பிறகு சற்று ஓய்ந்தது. இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி- கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது.
விடிய, விடிய பெய்த மழையினால் விழுப்புரம் வழுதரெட்டி, தாமரைக்குளம், கே.கே.சாலை அண்ணாநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வளவனூர் மேட்டுத்தெருவில் சங்கர் (வயது 55) என்பவரின் கூரை வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.
ஆறுகளில் வெள்ளம்
தொடர் மழையினால் மாவட்டம் முழுவதும் இதுவரை மொத்தம் 1,334 ஹெக்டேர் பரப்பில் நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அதுபோல் தென்பெண்ணையாறு, பம்பை ஆறு, மலட்டாறு, சங்கராபரணி, கோரையாறு, வராக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக ஆறுகளின் குறுக்கே உள்ள பல்வேறு தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் பல கிராமப்புறங்களுக்கு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பம்பை ஆற்று வெள்ளப்பெருக்கினால் வாதானூரில் உள்ள பாசன வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதேபோல் திண்டிவனம், மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
செங்குறிச்சி ஏரி
தொடர் மழையின் காரணமாக உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி ஏரி நிரம்பி உபரி நீர் அருகில் உள்ள வயல் வெளிகளில் புகுந்ததால் சுமார் 400 ஏக்கர் நெல், உளுந்து பயிர்கள் மற்றும் கொய்யா செடிகள் முழுவதுமாக நீரில் மூழ்கின. திருநாவலூர் ஒன்றியத்தில் நெல் மற்றும் உளுந்து சாகுபடி செய்த 1,500 ஏக்கர் நிலங்கள் மழை நீரில் மூழ்கி இருப்பதாக வேளாண்மைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் மாரனோடை ரெயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் 20 கிராம மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
தரைப்பாலம் மூழ்கியது
கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள கூட்டடி கள்ளக்குறிச்சி கிராமம் நரியனோடை தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் 200 ஹெக்டேர் கரும்புகள், 150 ஹெக்டேர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. நெற்பயிர்கள் நாற்று நட்டு 25 நாட்கள் ஆன நிலையில் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எறையூரில் 30 மில்லி மீட்டர், குறைந்த பட்சமாக ஆலத்தூரில் 7 மில்லி மீட்டர் மழை பெய்தது. சராசரியாக 19.66 மில்லி மீட்டர் மழை பதிவானது.
Related Tags :
Next Story