திருக்கோவிலூர் அருகே பரபரப்பு குப்பை கொட்டும் தகராறில் விவசாயி அடித்துக்கொலை
திருக்கோவிலூர் அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயியை அடித்துக் கொலை செய்த தாய் மகனை போலீசார் கைது செய்தனர்
திருக்கோவிலூர்
விவசாயி
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூரை அடுத்த நாயனூர் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 60). விவசாயியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அய்யாவு(55) என்பவரின் குடும்பத்துக்கும் இடையே குப்பை கொட்டுவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று அய்யாவு மனைவி பூங்காவனம் தன் வீட்டின் குப்பைகளை ஏழுமலை வீ்ட்டின் அருகே கொட்டியதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த ஏழுமலை குடிபோதையில் பூங்காவனத்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அடித்துக்கொலை
இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை பூங்காவனத்தை திட்டி தாக்கினார். இதைப்பார்த்து பூங்காவனத்தின் 14 வயது மகன் அருகில் கிடந்த மரக் கட்டையை எடுத்து ஏழுமலையின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஏழுமலை பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தாய்-மகன் கைது
இந்த கொலைசம்பவம் பற்றிய தகவல் அறிந்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, அரகண்டநல்லூர் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பூங்காவனம் மற்றும் அவரது மகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயியை அடித்துக்கொலை செய்த சம்பவம் அரகண்டநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story