புதுக்கோட்டை மாவட்டத்தில் இடைவிடாத மழையால் 44 வீடுகள் சேதம்; 7 கால்நடைகள் இறப்பு


புதுக்கோட்டை மாவட்டத்தில் இடைவிடாத மழையால் 44 வீடுகள் சேதம்;  7 கால்நடைகள் இறப்பு
x
தினத்தந்தி 10 Nov 2021 11:34 PM IST (Updated: 10 Nov 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் இடைவிடாது பெய்த மழையில் 44 வீடுகள் சேதமடைந்தன. 7 கால்நடைகள் இறந்தன.

புதுக்கோட்டை:
வானம் மேகமூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் தொடர் மழை பெய்து வருகிறது. வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் உள்பட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தன. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் இடைவிடாது மழை பெய்தது. தொடர்ந்து இரவிலும் தூறியபடி இருந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று அதிகாலை 6.30 மணி வரை மழை தூறியபடி இருந்தது. அதன்பின்னர் வெயில் அடிக்க தொடங்கியது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தில் கடலோர பகுதிகளிலும் இதே நிலைமை தான்.
44 வீடுகள் சேதம்
வானிலை மையம் ‘ரெட் அலர்ட்' விதித்திருந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டன. மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையினால் குடிசைகள், ஓட்டு வீடுகள் என மொத்தம் 44 வீடுகள் சேதமடைந்திருந்தன. 3 பசு மாடுகள், 4 கன்றுக்குட்டிகள் செத்தன. புதுக்கோட்டை வடக்கு நாலம் வீதியில் சிங்காரம் என்பவரின் ஓட்டு வீட்டின் பின்பக்கம் மழையினால் நேற்று சேதமடைந்தது. 
மாவட்டத்தில் மழையினால் 567 குளங்கள் முழுமையாக நிரம்பின. 1,786 குளங்கள் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை நிரம்பி உள்ளன. இந்த குளங்களும் தொடர் மழையினால் நிரம்பும் வகையில் உள்ளது.
மழை அளவு விவரம்
மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் 1,426.80 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி இருந்தது. ஊர்வாரியாக மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-39, பெருங்களூர்-36.50, புதுக்கோட்டை-53, ஆலங்குடி-45.40, கந்தர்வகோட்டை-55, கறம்பக்குடி-175.80, மழையூர்-115.10, கீழணை-31.40, திருமயம்-44.40, அரிமளம்-52, அறந்தாங்கி-67.20, ஆயிங்குடி-112.80, நாகுடி-59.60, மீமிசல்-59.60, ஆவுடையார்கோவில்-101.40, மணமேல்குடி-104.80, இலுப்பூர்-31.40, குடுமியான்மலை-38.60, அன்னவாசல்-36.40, விராலிமலை-24.40, உடையாளிப்பட்டி-23.70, கீரனூர்-58.30, பொன்னமராவதி-12.80, காரையூர்-23.60.
ஆறுகளில் பாய்ந்தோடும் தண்ணீர்
மாவட்டத்தில் மழையின் காரணமாக வெள்ளாறு, அக்னியாறு, காட்டாறுகளில் மழை நீர் பாய்ந்தோடுகிறது. பல இடங்களில் பல ஆண்டுகளுக்கு பின் ஆறுகளில் பரந்து விரிந்து தண்ணீர் ஓடுகிறது. அணைக்கட்டுகளில் இருந்து உபரிநீர் வெளியேறி பாய்ந்தோடுகிறது. புதுக்கோட்டை அருகே பூசத்துறையில் வெள்ளாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை பாலத்தின் மேல் நின்று பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதியில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். இந்நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 8.11.2021 முதல் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க மீன்வளத் துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கடந்த 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் மீனவர்கள் தொடர்ந்து கடலுக்குள் செல்ல மீன்வளத் துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் இந்த நிலை எப்போது சீராகும், எப்போது மீன்பிடிக்கச் செல்வது என்பது குறித்து மீனவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது. ஆகையால் தமிழக அரசு மீனவர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீரில் மூழ்கிய பயிர்கள் 
கறம்பக்குடி பகுதியில் நேற்று முன்தினம் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 17 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் கறம்பக்குடி, ரெகுநாதபுரம், மழையூர், குளந்திரான்பட்டு, திருமணஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் நீரில் முழ்கி உள்ளன. உரம், பூச்சிமருந்து என பல ஆயிரம் செலவு செய்துள்ள நிலையில் பயிர்கள் நீரில் முழ்கி உள்ளதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

Next Story