கறம்பக்குடி காட்டாற்றில் கரைபுரண்ட வெள்ளம் திருமணஞ்சேரி பாலம் நீரில் மூழ்கும் அபாயம் விராலிமலையில் மூழ்கியுள்ள நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை


கறம்பக்குடி காட்டாற்றில் கரைபுரண்ட வெள்ளம் திருமணஞ்சேரி பாலம் நீரில் மூழ்கும் அபாயம்  விராலிமலையில் மூழ்கியுள்ள நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Nov 2021 11:44 PM IST (Updated: 10 Nov 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடியில் மாவட்டத்திலேயே அதிக பட்ச மழை கொட்டி தீர்த்ததால் காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டது. இதனால் திருமணஞ்சேரி பாலம் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விராலிமலையில் மூழ்கியுள்ள நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கறம்பக்குடி:
பாலம் நீரில் மூழ்கும் அபாயம் 
கறம்பக்குடி பகுதியில் நேற்று முன்தினம் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 17 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் கறம்பக்குடி, ரெகுநாதபுரம், மழையூர், குளந்திரான்பட்டு, திருமணஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. உரம், பூச்சிமருந்து என பல ஆயிரம் செலவு செய்துள்ள நிலையில் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
இதேபோல் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி, பட்டத்திகாடு, வாணக்கன்காடு, கரு.வடதெரு, கரு.தெற்குதெரு, கரு.கீழதெரு ஆகிய ஊராட்சிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு செல்ல திருமணஞ்சேரி காட்டாற்று பாலத்தை கடந்துதான் செல்லவேண்டும். ஆனால் தொடர் கனமழையால் அக்னிஆறு, நரியாறு இரண்டிலும் வெள்ளம் பெருக்கெடுத்து. இந்த 2 ஆறுகளும் ஒன்றாக கலந்து செல்லும் திருமணஞ்சேரி பாலத்தின் மேல்பகுதியை தொட்டு தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. மேலும் மழை பெய்தால் பாலத்தின் மேலே தண்ணீர் சென்று பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கபடும் அபாயமும் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
இதுகுறித்து தகவலறிந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஷம்பு கல்லோலிகர், கலெக்டர் கவிதாராமு மற்றும் அதிகாரிகள் திருமணஞ்சேரி பாலத்தை ஆய்வு செய்து அதன் உறுதி தன்மை குறித்து கேட்டறிந்தனர். முன்னதாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கறம்பக்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள நரிகுறவர்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினர். தொடர்ந்து அதிரான்விடுதி, வெள்ளாள விடுதி கிராமங்களில் தண்ணீர் நிரம்பி உள்ள பாசன குளங்களை பார்வையிட்டனர். கறம்பக்குடி அருகே வெட்டன்விடுதியில் பெய்த கனமழையால் அங்கு இட்லிகடை நடத்தி வரும் பெரம்மையா என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததது.
விவசாயிகள் கோரிக்கை 
விராலிமலை ஒன்றிய பகுதியில் நேற்று முன்தினம் காலையில் இருந்து மாலை வரை பலத்த மழை பெய்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை வரை அடை மழையாக பெய்தது. இதனால் குளங்களில் மேலும் அதிகப்படியான மழைநீர் வெளியேறியதால் பேராம்பூர், பாக்குடி, ஆவூர், நீர்பழனி, களமாவூர், மண்டையூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் உள்ள வயல்களில் நெற்பயிர்கள் தெரியாத அளவிற்கு மழைநீரால் மூழ்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதிகளில் மழைநீரால் சூழ்ந்துள்ள பயிர்களையும், விராலிமலை ஒன்றியம் பாக்குடி ஊராட்சி, பையூர் சின்ன குளம் உடைந்து பெரியகுளம் வழியாக அதிகப்படியான மழைநீர் வெளியேறியதால் அங்குள்ள சாலையில் அரிப்பு ஏற்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளதையும் மழை நீரால் சூழ்ந்துள்ள குடியிருப்புகளையும் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் பேராம்பூர் பெரியகுளத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள மதகுகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதை பார்வையிட்டார். அப்போது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவருடன் இருந்தனர்.
ஆவுடையார்கோவில்
புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய கவிநாடு கண்மாய் நிறைந்து மதகு திறக்கப்படாமல் உபரிநீர் மட்டும் வெளியேறி வருகிறது. இந்நிலையில், ஆவுடையார்கோவில் வெள்ளாற்றில் வெள்ளநீர் கரை புரண்டு ஓடுகிறது.
குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் 
புதுக்கோட்டையில் பெய்த தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகர் செல்லும் வழியில் உள்ள தடிகொண்டு அய்யனார் ரோட்டில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழந்துள்ளது. இந்த மழை நீரை அகற்றும் விதமாக மோட்டார் பம்பு செட் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. இதனால் அந்தக் குடியிருப்பு பகுதி வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

Next Story