பனையூர் பெரிய ஏரி 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது
ஆரணி அருகே பனையூர் ஏரி நிரம்பிவழியும் தண்ணீர் சாலையை மூழ்கடித்து செல்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
ஆரணி
ஆரணி அருகே பனையூர் ஏரி நிரம்பிவழியும் தண்ணீர் சாலையை மூழ்கடித்து செல்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
பனையூர் ஏரி நிரம்பியது
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அடுத்த செண்பகத்தோப்பு அணை நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கமண்டல நதி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக குன்னத்தூர், அக்ராபாளையம், இரும்பேடு, அடையப்புலம், மெய்யூர் உள்பட பல ஏரிகள் நிரம்பி கோடி விடும் நிலை உள்ளது. பல ஏரிகள் கோடி விடப்பட்டு வருகிறது.
ஆரணியை அடுத்த பனையூர் ஊராட்சிக்குட்பட்ட ஒட்டந்தாங்கல் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 365 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி 6 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டி வடக்கு மேடு, பனையூர் ஆகிய 2 கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. ஒட்டந்தாங்கல் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வடக்கு மேடு, ஒட்டந்தாங்கல் செல்லும் சாலையில் சுமார் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது.
பொதுமக்கள் அவதி
இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் வேலைக்கு செல்ல முடியாமலும், வேலைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பும்போது சாலையை கடக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மேலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளதால் அப்பகுதி பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா உத்தரவின்பேரில் ஆரணி தாசில்தார் பெருமாள், ஆரணி ஒன்றியக் குழு தலைவர் கனிமொழி சுந்தர், ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கு.இந்திரா, சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலி குப்புசாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முருகேசன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வடக்கு மேடு, ஒட்டந்தாங்கல் கிராமங்களுக்கு செல்பவர்கள் மாற்று வழியில் செல்ல ஊராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story