அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை தீபத்திருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. இதைமுன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போன்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தீபத் திருவிழாவில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலை சுமார் 6 மணியளவில் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க ஆடியபடி வந்து தங்க கொடிமரத்தின் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத தங்ககொடி மரத்தில் காலை 6.45 மணியளவில் கொடியேற்றப்பட்டது.
அப்போது கோவிலில் இருந்த பக்தர்கள் ‘அண்ணா மலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோஷம் எழுப்பினர். கொடியேற்றத்தை தொடர்ந்து சுமார் 11.30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் முன்பு எழுந்தருளினர். அங்கு பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த ஆண்டும் சாமி மாடவீதியுலா ரத்து செய்யப்பட்டதால் சாமி உலா 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை.
மகா தீபம்
தொடர்ந்து காலை முதல் மாலை வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் பக்தர்கள் கடுமையான சோதனைக்கு பின்பே கோவிலுக்குள் செல்ல அனுமதித்தனர். தொடர்ந்து இரவிலும் கோவில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் உலா நடந்தது. விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் உலாவும் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டும் தேரோட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் 7-ம் நாள் விழா அன்று ஆகம விதிகளின் படி பஞ்சமூர்த்திகள் உற்சவ நிகழ்ச்சி கோவில் வளாகத்திற்குள்ளேயே நடத்த கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணியளவில் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. தங்க விமானங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, அர்த்தநாரீஸ்வரர் காட்சித் தர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றபடும்.
தொடர்ந்து 20-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. 23-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவ நிகழ்ச்சியுடன் தீபத் திருவிழா நிறைவடைகின்றது.
குறைந்த அளவிலான பக்தர்கள்
திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று பகல் வரை மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் கொடியேற்றம் நிகழ்ச்சியை காண பக்தர்கள் கோவிலின் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் முன்பு அதிகாலை 5 மணியில் இருந்து திரண்டிருந்தனர். போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது பக்தர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென சிலர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து கொடியேற்றம் நிகழ்ச்சியை காண பக்தர்களை கோவிலுக்குள் அனுமதித்தனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கோவிலுக்குள் வந்து கொடியேற்றம் நிகழ்ச்சியை கண்டு கழித்தனர். இருப்பினும் கொடியேற்றம் நிகழ்ச்சியில் குறைந்த அளவிலான பக்தர்களே கலந்து கொண்டனர்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி, கூடுதல் கலெக்டர் பிரதாப், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையாளர்அசோக்குமார் முன்னாள் நகர மன்றத் தலைவர் ஸ்ரீதரன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story