நெல்லையில் ஐ.பி.எஸ். அதிகாரி ஆய்வு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கண்காணிப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு ஐ.பி.எஸ். அதிகாரி நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்தார்.
நெல்லை:
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கண்காணிப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு ஐ.பி.எஸ். அதிகாரி நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்தார்.
ஐ.பி.எஸ். அதிகாரி
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. மேலும், அதிக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையை கண்காணிக்க ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்வதற்காக தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதில், நெல்லை மாவட்டத்திற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் ஐ.ஜி.யான அபின் தினேஷ் மொடக் நியமிக்கப்பட்டார்.
ஆய்வு
இதைத்தொடர்ந்து ஐ.பி.எஸ். அதிகாரி அபின் தினேஷ் மொடக் நெல்லை வந்தார். மாவட்டத்தில் அதிக மழை பெய்தால் வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படும் பகுதிகளை நேற்று நேரில் பார்வையிட்டார்.
நெல்லை மாநகர பகுதிகளில் ஏற்கனவே அதிக கனமழையின்போது வெள்ள பாதிப்பு ஏற்பட்ட உடையார்பட்டி தாமிரபரணி ஆற்றுப்பாலம், கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலம் மற்றும் தாமிரபரணி ஆற்றுப் படுகைகளை ஆய்வு செய்தார். தாமிரபரணி நீர்வரத்தை பார்வையிட்டார். இதனைதொடர்ந்து முன்னீர்பள்ளம், சேரன்மாதேவி, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஆய்வின்போது அதிகனமழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ளப்பாதிப்பில் பொதுமக்கள் சிக்கினால் அவர்களை அங்கிருந்து மீட்க தேவையான நடவடிக்கைகள், பாதிப்பிற்கு முன்னெச்சரிக்கையாக பொதுமக்களை அப்புறப்படுத்துவதற்கான வழிகள், மீட்பு பணி வாகனங்கள் செல்வதற்கான பாதைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது நெல்லை மாநகர கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், ஷோபா ஜென்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பாபநாசம் அணை
இதைத்தொடர்ந்து பாபநாசம் அருகேயுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவள்ளுவர் நகர் பகுதியில் கடந்த 1992-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட மழையின்போது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து இரவு நேரத்தில் வீட்டில் இருந்த 17 பேர் உயிரிழந்தனர். இதனால் முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அவர், பாபநாசம் அணைக்கு சென்று ஆய்வு செய்தார். அணையின் நீர் இருப்பு, தண்ணீர் திறப்பு மற்றும் நீர்வரத்தின் அளவு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், அம்பை துணை சூப்பிரண்டு பிரான்சிஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story