தொடர் மழையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது
தொடர் மழையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது
விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக விக்கிரமங்கலம் அருகே காசாங்கோட்டை-நடுவலூர் இடையே உள்ள சுத்தமல்லி பெரிய ஓடை தரைப்பாலம் மூழ்கியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள பல ஓடைகள் ஒன்றிணைந்து இதன் வழியாக சென்று சுத்தமல்லி நீர்த்தேக்க ஏரியில் வடிக்கின்றன. இந்த தரைப்பாலம் மூழ்கியுள்ளதால் காசாங்கோட்டை-நடுவலூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், 6 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் சென்று பொதுமக்கள் அத்தியாவசியை பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆகவே, பெரியஓடை தரைப்பாலத்தில் மேம்பாலம் கட்டி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செந்துறை
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது. நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் அரியலூர் மாவட்டத்தில் 35 சென்டிமீட்டர் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பி சாலைகளிலும், ஓடைகளிலும் ஆறு போல் ஓடி வருகிறது. இந்நிலையில் செந்துறை பகுதியில் உள்ள பாளையத்தார் ஏரி நிரம்பி வழிகிறது. கட்டைக்காடு ஏரி நிரம்பி உடையும் நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த ஊராட்சி நிர்வாகம் மணல் மூட்டைகளை அடுக்கி கரை உடையாமல் தடுத்தனர்.
Related Tags :
Next Story