திருச்சி மாவட்டத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் நெற்பயிர்கள் அழுகும் அபாயம்
திருச்சி மாவட்டத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி
நெற்பயிர்கள் அழுகும் அபாயம்
திருச்சி மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடியாக நெல் பயிரிடப்பட்டுள்ளது. 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி, 37 ஆயிரம் ஏக்கர் மக்காசோளம், 30 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, தொடர் மழை பெய்து வருவதால் நெல் நடவு செய்த வயல் வெளிகளில் மழைநீர் தேங்கி வடிய வழியின்றி உள்ளது.
மேலும் வாழை சாகுபடி செய்த வயல்களில் மழை தண்ணீர் தேங்கி உள்ளது. தொடர்ச்சியாக நெற்பயிர் மற்றும் வாழைகளில் தண்ணீர் உள்ளதால் அவை அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பயிர்கள் பாதிப்பு
இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் கூறியதாவது:-
அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், லால்குடி, கொடியாலம், புலிவலம், மேக்குடி, சாத்தனூர், மருதாண்டகுறிச்சி, திருப்பராய்த்துறை, அணலை உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. அவற்றில் அந்த நல்லூர் ஒன்றியத்தில் மட்டும் மழையால் 300 ஏக்கர் வாழை பாதிக்கப்பட்டுள்ளன.
இதுபோல அந்தநல்லூர், திருவெறும்பூர் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 600 ஏக்கர் நெல் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால் செல்லும் பாதைகள் அமலைச்செடிகளால் அடைக்கப்பட்டுள்ளதால் வெளியே செல்ல வழியில்லாமல் உள்ளது. பயிர் பாதிப்புகளை கணக்கிட கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.20 ஆயிரம் இழப்பீடு
ஒரு ஏக்கர் சாகுபடிக்கு ரூ.25 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர். ஏற்கனவே, கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 3-வது முறையாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story