தேசிய சட்ட ஆணைக்குழுவின் சிறப்பு விழிப்புணர்வு முகாம்


தேசிய சட்ட ஆணைக்குழுவின் சிறப்பு விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 11 Nov 2021 1:10 AM IST (Updated: 11 Nov 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவின் விழிப்புணர்வு முகாமினை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.

விருதுநகர், 
விருதுநகரில் தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவின்  விழிப்புணர்வு முகாமினை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.
 விழிப்புணர்வு முகாம்
 தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவின் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாமினை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார். சார்பு நீதிபதி சதீஷ் முன்னிலை வகித்தார். 
நீதி பெறும் உரிமை ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் சமமாக சென்றடைய வேண்டும் என்பதற்காக தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. பணம் மற்றும் வசதி வாய்ப்புகள் இல்லை என்பதற்காக நீதி மறுக்கக்கூடாது. அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மூலம் பல்வேறு இலவச சட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் மற்றும் தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து தேசிய சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் அனைவருக்கும் நீதி கிடைக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இலவச சட்ட உதவிகளை அறிந்து கொள்ளும் வகையிலும் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சி அரங்குகள் 
முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறை மூலம் கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும்,  வேளாண்மை மற்றும் தொழிலாளர் துறை சார்பிலும், தோட்டக்கலை துறை சார்பிலும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் உள்பட பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும் பொது மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.
 செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் அதிநவீன மின்னணு விளம்பரத்துறை வீடியோ வாகனம் மூலம் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாம் மூலம் தங்களுக்கு தேவையான சட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்து பயன்பெறவேண்டுமென கலெக்டர் மேகநாதரெட்டி கேட்டுக்கொண்டார்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், மாவட்ட உரிமையியல் நீதிபதி சிந்துமதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் மருதுபாண்டி, நிஷாந்தினி அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story