கந்தசஷ்டி விழாவையொட்டி பல்வேறு முருகன் கோவில்களில் திருக்கல்யாணம்


கந்தசஷ்டி விழாவையொட்டி பல்வேறு முருகன் கோவில்களில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 11 Nov 2021 1:10 AM IST (Updated: 11 Nov 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

கந்தசஷ்டி விழாவையொட்டி பல்வேறு முருகன் கோவில்களில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

திருச்சி
கந்தசஷ்டி விழா
முருகப் பெருமானுக்கு நடத்தப்படும் விழாக்களில் முதன்மையானது கந்தசஷ்டி விழா மற்றும் அதனுடன் இணைந்த சூரசம்ஹாரம் ஆகும். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படவில்லை.இதனால் இந்த ஆண்டு சூரசம்ஹார விழா பல கோவில்களில் நடை பெறவில்லை. அதே நேரம் கந்தசஷ்டி விழாவின் தொடர் நிகழ்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருக்கல்யாணம்
திருச்சி சாத்தனூர் சாலை, சுப்பிரமணிய நகரில் உள்ள முருகன் கோவிலில் நேற்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். இதுபோல் திருச்சி ஜங்ஷனில் உள்ள வழிவிடு வேல் முருகன் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
மேலும் மலைக்கோட்டை அருகே உள்ள நாகநாதசுவாமி கோவிலில் கல்யாண பாலசுப்பிரமணியர், திருச்சி தாராநல்லூரில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவில் உள்பட திருச்சி மாநகரில் உறையூர், சுப்பிரமணியபுரம், சுந்தர்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
தொட்டியம்-காட்டுப்புத்தூர்
தொட்டியம் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டியையொட்டி நேற்று சுப்பிரமணியசுவாமி மற்றும் வள்ளி தெய்வானை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவிலில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் தொட்டியம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
காட்டுப்புத்தூர் அருகே உள்ள தலைமலைபட்டியில் உள்ள வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று அபிஷேக ஆராதனை நடத்தியதை தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் மேய்க்கல் நாயக்கன்பட்டி, ஏழூர்பட்டி, களத்தூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முசிறி-தா.பேட்டை
முசிறி சந்திரமவுலீஸ்வரர் சிவாலயத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். தா.பேட்டை காசிவிசுவநாதர் சிவாலயத்தில் பிரகாரத்தில்அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப் பெருமான் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுக பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 தா.பேட்டை அருகே தேவானூர் சண்முககிரி மலையில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமிக்கு திருக்கல்யாண விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் அலங்காரங்களும் நடைபெற்றது. தா.பேட்டை அருகே என்.கருப்பம்பட்டி கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Next Story