கரூரில் சராசரியை விட 116.67 மி.மீ. கூடுதலாக மழை பெய்துள்ளது


கரூரில் சராசரியை விட 116.67 மி.மீ. கூடுதலாக மழை பெய்துள்ளது
x
தினத்தந்தி 11 Nov 2021 1:21 AM IST (Updated: 11 Nov 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் சராசரியை விட 116.67 மி.மீ. கூடுதலாக மழை பெய்துள்ளதாக மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

கரூர்,
ஆய்வுக்கூட்டம்
வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையருமான ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் வகையில் கரூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், வீடுகள் சேதம் குறித்தும், சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர், கடந்த காலங்களில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகள், தற்போது பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் பகுதிகளில் எந்தவகையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஒவ்வொரு துறை வாரியாக ஆய்வு செய்தார்.
ஒத்திகை நிகழ்ச்சி
இதனைத்தொடர்ந்து, அமராவதி அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடுவதை பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர், அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்சென்று தங்கவைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், 3 ஆறுகள் சங்கமிக்கும் இடமான திருமுக்கூடலூர் பகுதியில் தீயணைப்புத்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட பேரிடர்கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியினை பார்வையிட்டார். 
இதில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் ஒருவர் சிக்கிக்கொண்டால் அவரை எவ்வாறு மீட்பது, மீட்கப்பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னன்ன என்பது குறித்தும், பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக இருப்பது குறித்தும் தீயணைப்புத்துறையினர் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்திக்காட்டினர்.
768.87 மி.மீ மழை
பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ் கூறியதாவது:- மழைநீரால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கும் வகையில் கிராமங்கள் அளவில் மொத்தம் 1,765 பேர், முதல் தகவல் தெரிவிக்கும் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளாக 76 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புக்குழுவினர் 73 பேர் தயார் நிலையில் உள்ளார்கள். கரூர் மாவட்டத்தில் ஒரு ஆண்டில் பெய்யும் மழையின் சராசரி அளவு 652.2 மி.மீ. ஆகும். ஆனால் தற்போது 768.87 மி.மீ அளவில் மழைபெய்துள்ளது. இது சராசரியை விட 116.67 மி.மீ அளவு கூடுதலாகும். 
மழைக்காலத்திற்கு முன்பே மாபெரும் தூர்வாரும் திட்டத்தின் மூலம் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால்கள் முழுவதும் தூர்வாரப்பட்டதால் தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீர் எளிதில் வடிந்து செல்ல பேருதவியாக உள்ளது.
ரேஷன் பொருட்கள்
தொடர்மழையால், இதுவரை 16 குடிசைகள் பகுதியளவிலும், ஒரு குடிசை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. குடிசை அல்லாத 46 வீடுகள் பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் பொருட்கள் தடையில்லாமல் அனுப்பப்பட்டு வருகிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story