காரைக்காலில் ஒரே நாளில் 28.7 செ.மீ. மழை பதிவு
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரேநாளில் 28.7 செ.மீட்டர் மழை பதிவானது.
காரைக்கால், நவ.11-
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரேநாளில் 28.7 செ.மீட்டர் மழை பதிவானது. தேங்கிய மழை தண்ணீரில் இறங்கி அமைச்சர் சந்திரபிரியங்கா ஆய்வு செய்தார்.
குளமான சாலைகள்
வட கிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் காரைக்காலில் நேற்று முன்தினம் காலை முதல் லேசாக பெய்த மழை பிற்பகலில் அதிகரித்து சிறிது கூட இடைவெளி இல்லாமல் வெளுத்து வாங்கியது.
இதனால், காரைக்காலில் உள்ள பாரதியார் சாலை, காமராஜர் சாலை, பி.கே.சாலை, கடற்கரை சாலை, காரைக்கால் அரசு மருத்துவமனை, திருநள்ளாறு, நெடுங்காடு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஏராளமான கிளை சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
வாகனங்கள், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றன. தொடர்ந்து பெய்த மழையால் வீடுகளிலேயே முடங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மருத்துவமனைகளில் நோயாளிகள், டாக்டர்கள், செவிலியர்கள் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
காலை முதல் நள்ளிரவு வரை ஒரேநாளில் 28.7 செ.மீட்டர் மழை பதிவானது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக கருதப் படுகிறது.
பேரிடர் மீட்பு குழு வருகை
நேற்று (புதன்கிழமை) காலை முதல் இரவு வரை காரைக்காலில் மழை இல்லை. ஆனால், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மீனவர்கள் 3-ம் நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. ஏராளமான கிராமங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் வடிய வழியின்றி வெள்ளம் சூழ்ந்தது போல் காட்சி தருகிறது.
மாவட்ட நிர்வாகம் சார்பில், ஒரு சில இடங்களில் தன்ணீரை வெளியேற்றும் முயற்சியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அரக்கோணத்தில் இருந்து தலைமை அதிகாரி ஸ்ரீவத்சவா தலைமையில், 20-க்கு மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் காரைக்கால் வந்துள்ளனர். மழையில் சாய்ந்த மரங்களை வெட்டியும், பல இடங்களில் தேங்கி கிடக்கும் மழை நீரை வெளியேற்றியும் வருகின்றனர்.
அமைச்சர் பார்வையிட்டார்
நெடுங்காடு உள்ளிட்ட பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழை நீரையும், பாதிக்கப்பட்ட மக்களையும் அமைச்சர் சந்திரபிரியங்கா நேற்று காலை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை சமுதாயக்கூடங்கள், பள்ளிகளில் தங்கவைத்து உணவு வழங்க உத்தரவிட்டார். கலெக்டர் அர்ஜூன்சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன் மற்றும் அரசு அதிகாரிகள், அமைச்சருடன் இணைந்தும், தனித்தனியாகவும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், காரைக்கால் தெற்கில் எம்.எல்.ஏ நாஜிம், வடக்கில் எம்.எல்.ஏ திருமுருகன், திருநள்ளாறில் எம்.எல்.ஏ. சிவா ஆகியோர் அந்தந்த பகுதியில் மழை பாதிப்பை ஆய்வு செய்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
காரைக்கால் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பு எண் 1070 மற்றும் 1077 ஆகும். இது இல்லாமல், அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் வாட்ஸ் அப் எண்-9087421509, 9789255077 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்களில் பொதுமக்கள் எந்நேரமும் தங்கள் பகுதியில் ஏற்படும் மழை தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் பதிவு செய்யலாம் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக காய்கறி, மீன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது
நாக.தியாகராஜன் எம்.எல்.ஏ.
காரைக்காலை அடுத்த நிரவி திருப்பட்டினம் தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நாக.தியாகராஜன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், மழைநீர் சூழ்ந்த இடங்களில் வசித்த பொதுமக்களை தொண்டர்களின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினார். கீழவாஞ்சூர், மேலவாஞ்சூர், போலகம், நிரவி, விழிதியூர், ஊழியப்பத்து, நடுக்களம் பேட் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்தார்.
தொடர்ந்து அவர் கருக்களாச்சேரி மீனவ கிராமத்துக்குச் சென்றார். அக்கிராம மக்களுக்குரிய புயல் பாதுகாப்பு மையத்தை ஆய்வு செய்தார். மீனவர்களுக்குரிய நிவாரணம் விரைந்து கிடைக்க அரசிடம் கோரியுள்ளதாக தெரிவித்தார்.
நீர் தேங்கிய பகுதிகளில் அடைப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றவும், பால்வாடி, பள்ளிக்கூடங்கள், சமுதாயக் கூடங்களை சுற்றித் தேங்கிய வெள்ள நீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றுவதற்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story