மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு
மண்ணாடிப்பட்டு தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
திருக்கனூர், நவ.11-
மண்ணாடிப்பட்டு தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.
அமைச்சர்கள் ஆய்வு
தொடர் மழையால் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட செட்டிப்பட்டு, மணலிப்பட்டு, திருக்கனூர் உள்பட பல்வேறு கிராமங்களில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளன. விளை நிலங்களில் சூழ்ந்துள்ள தண்ணீர் வடிய வழியில்லாததால் நெற்பயிர்கள் அழுகும் நிலை உள்ளது.
இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
நிவாரணம் வழங்க கோரிக்கை
நிரம்பி வழியும் செட்டிப்பட்டு படுகை அணை, கூனிச்சம்பட்டு படுகை அணை மற்றும் சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் மணலிப்பட்டு ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரினால் பல ஏக்கர் விவசாய நிலம் நீரில் மூழ்கி இருப்பதை பார்வையிட்டனர். அப்போது விவசாய நிலம் பாதிக்காமல் இருக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து வாதானூர், திருக்கனூர், மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டார்.
செட்டிப்பட்டு பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி முதல்-அமைச்சரிடம் தெரிவித்து உரிய நிவாரணம் பெற்றுத்தருவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
உடனிருந்தவர்கள்
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், பா.ஜ.க. பிரமுகர்கள் முத்தழகன், தமிழ்மணி, செல்வகுமார், கலியபெருமாள் மற்றும் பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் உடனிருந்தனர்.
____
Related Tags :
Next Story