சமூக வலைதளம் மூலம் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை
மார்த்தாண்டம் அருகே சமூக வலைதளம் மூலம் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
மார்த்தாண்டம் அருகே சமூக வலைதளம் மூலம் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் மார்த்தாண்டம் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருகிறேன். என் கணவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இந்த நிலையில் எனது செல்போனுக்கு சமூக வலைதளம் (முகநூல்) மூலம் ஒரு தகவல் வந்தது. அதை பார்த்த போது, என்னை சம்பந்தப்படுத்தி ஆபாசமான தகவல்கள் பகிரப்பட்டு இருந்தன. அதை நான் உடனே நீக்கிவிட்டேன்.
அதன்பிறகு வேறு ஒரு கணக்கில் இருந்து எனது சமூக வலைதளத்தில் குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆபாசமான தகவல்களை ஒருவர் அனுப்பினார். மேலும் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் எனக்கு அனுப்பினார். அதோடு மெசஞ்சரில் வீடியோ கால் மூலமாகவும் என்னிடம் பேசி தொல்லை கொடுத்தார்.
போலீசார் விசாரணை
அப்போது அவரது ஆசைக்கு என்னை இணங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், மேலும் மோசமான ஆபாச படங்களை வெளியிடுவதாகவும் கூறி மிரட்டினார். சம்பந்தப்பட்ட நபர் என்னையும், எனது கணவரையும் தெரிந்தது போல பேசுகிறார். சமூக வலை தளத்தில் போலி கணக்கை உருவாக்கி என் மீது பாலியல் அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதே போல் மற்றொரு இளம்பெண்ணும் புகார் கொடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபர் யார்? என்று விசாரணை நடத்தினார்கள்.
கைது
அப்போது காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சுரேஷ் (வயது 25) என்பவர்தான் புகார் தெரிவித்த பெண்களின் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனீப் ஆகியோர் சுரேசை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story