குமரியில் ரப்பர் பால் வெட்டும் தொழில் மீண்டும் தொடங்கியது


குமரியில் ரப்பர் பால் வெட்டும் தொழில் மீண்டும் தொடங்கியது
x
தினத்தந்தி 11 Nov 2021 2:22 AM IST (Updated: 11 Nov 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரப்பர் பால் வெட்டும் தொழில் 2 வாரத்துக்கு பிறகு நேற்று தொடங்கியது.

திருவட்டார், நவ.11-
தொடர் மழையின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரப்பர் பால் வெட்டும் தொழில் 2 வாரத்துக்கு பிறகு நேற்று தொடங்கியது.
ரப்பர் பால் வெட்டும் தொழில்
குமரி மேற்கு மாவட்டத்தின் முக்கிய தொழிலான ரப்பர் பால் வெட்டும் தொழில் கடந்த 2 வாரமாக பெய்த தொடர் மழையின் காரணமாக நடக்கவில்லை. 
மழையின்போது ரப்பர் மரத்தில் பால் வடிப்பு செய்தால் மழை நீர் மரப்பட்டையில் உட்புகுந்து பட்டை அழுகி விடும். இது மட்டுமல்லாமல் மழை நீர் ரப்பர் பாலில் கலந்து ரப்பர் பால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே மழையின் போது பால் வடிப்பு செய்யப்படுவது இல்லை. பெரிய தோட்டங்களில் மழையின் போது பால் வடிப்பு செய்வதற்காக ரெயின் கார்டு அமைத்திருப்பார்கள். ஆனால் சிறு விவசாயிகள் ரப்பர் மரங்களில் ரெயின் கார்டு அமைப்பது இல்லை.
மீண்டும் தொடங்கியது
இந்தநிலையில் தற்போது 2 வாரத்திற்கு பிறகு மீண்டும் பால் வெட்டும் தொழில் நேற்று தொடங்கியது. இதனால் தொழிலாளர்களும், சிறு விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பால் வடிப்பு தொழிலாளி ஒருவர் கூறுகையில், இந்த வருடம் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இதுவரை 100 நாட்கள் கூட வேலை பார்த்திருக்க மாட்டோம். ஒரு ரப்பர் மரத்தில் இருந்து பால் வடிப்பு செய்து, குவளையில் இருக்கும் ரப்பர் பாலை எடுத்து திராவகம் கலந்து உறைய வைத்து ஷீட் ஆக மாற்றிக்கொடுத்தால் மரம் ஒன்றுக்கு 2 ரூபாய் கணக்கில் சம்பளம் கிடைக்கும். அதன்படி  அதிகபட்சமாக 800 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். இப்போது தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வேலையின்றி சிரமப்பட்டோம். தற்போது எங்கள் பகுதியில் மழை குறைந்துள்ளதால் ரப்பர் மரத்துக்கு பால்வெட்டும் பணியை தொடங்கி உள்ளோம். தொடர்ந்து இதே கால நிலை நீடிக்குமானால் ரப்பர் மரத்தில் பால்வடிப்பு வேலை நடக்கும். மழை பெய்தால் பால்வடிப்பு வேலை நடக்காது” என்றார்.
தற்போது நல்ல விலை
ரப்பர் தோட்ட உரிமையாளர் ஒருவர் கூறுகையில், தற்போது ரப்பர் ஷீட்டுக்கு ரூ.160 முதல் ரூ.175 வரை விலை இருக்கிறது. சொல்லப்போனால் இது சற்று நல்ல விலை என்றே கூறலாம். முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு பால்வடிப்பு செய்த நாள் குறைவு என்றே கூறலாம். மழை குறைந்தால் பால்வெட்டு தொழில் நடந்து ரப்பர் உற்பத்தி அதிகரிக்கும் ” என்றார்.

Next Story