உண்டியல் காணிக்கை


உண்டியல் காணிக்கை
x
தினத்தந்தி 10 Nov 2021 8:52 PM GMT (Updated: 10 Nov 2021 8:52 PM GMT)

தஞ்சை பெரியகோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.12 லட்சமும், 61 கிராம் தங்கமும், 272 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

தஞ்சாவூர்;
தஞ்சை பெரியகோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.12 லட்சமும், 61 கிராம் தங்கமும், 272 கிராம் வெள்ளியும் கிடைத்தது.
தஞ்சை பெரியகோவில்
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், கருவூரார் சித்தர், விநாயகர், முருகன் என தனித்தனி சன்னதிகள் உள்ளன.
இந்த கோவிலில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இந்த கோவிலில் உள்ள உண்டியல்கள் மாதத்துக்கு ஒருமுறை திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று அனைத்து உண்டியல்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டு முருகன் சன்னதி எதிரே உள்ள மண்டபத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
ரூ.12 லட்சம் உண்டியல் காணிக்கை
பின்னர் 11 உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. உண்டியல் எண்ணும் பணியை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவராம்குமார், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் மாதவன், ஆய்வாளர் உமாராணி, மேற்பார்வையாளர் ரெங்கராஜன் ஆகியோரது முன்னிலையில் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் காணிக்கையை எண்ணினர்.
இதில் ரூ.12 லட்சத்து 5 ஆயிரத்து 624-ம், 61 கிராம் தங்க நகைகளும், 272 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் திறக்கப்பட்டது முதல் எண்ணும் பணி நிறைவடையும் வரை அனைத்தும் வீடியோ பதிவும் செய்யப்பட்டது.

Next Story