போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
திருவிடைமருதூர் அருகே பள்ளி மாணவா் தற்கொலைக்கு காரணமானவரை கைது செய்யக்கோரியும் போலீசாரை கண்டித்தும் மாணவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவிடைமருதூர்;
திருவிடைமருதூர் அருகே பள்ளி மாணவா் தற்கொலைக்கு காரணமானவரை கைது செய்யக்கோரியும் போலீசாரை கண்டித்தும் மாணவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாணவர் தற்கொலை
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மகன் விஷால்(வயது16). இவர் திருநாகேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் மாணவர் விஷால் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். மாணவரை தற்கொலைக்கு தூண்டியவரை கைது செய்யக்கோரி கடந்த 5-ந் தேதி திருநாகேஸ்வரம் கடைவீதியில் விஷால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் மாணவர் தற்கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி போலீசாரை கண்டித்து நேற்று மீண்டும் நூற்றுக்கு மேற்பட்டோர் திருநாகேஸ்வரம் கடைவீதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் 12 மணி முதல் மாலை 4.30 மணி வரை சாலை மறியல் நடந்தது. போராட்டக்காரர்களிடம் போலீசார் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதன்பின் வஜ்ரா வேன் வந்த நிலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் பேச்சு நடத்தினார். அதன் பின்னர் மறியல் கைவிடப்பட்டது. 4 மணி நேரத்திற்கு மேலாக மறியல் நடைபெற்றதால் கும்பகோணம்- காரைக்கால் சாலையில் போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.
Related Tags :
Next Story