2 நாள் சுற்றுப்பயணமாக பசவராஜ் பொம்மை டெல்லி சென்றார்; மோடியை இன்று சந்தித்து பேசுகிறார்


2 நாள் சுற்றுப்பயணமாக பசவராஜ் பொம்மை டெல்லி சென்றார்; மோடியை இன்று சந்தித்து பேசுகிறார்
x
தினத்தந்தி 11 Nov 2021 3:25 AM IST (Updated: 11 Nov 2021 3:25 AM IST)
t-max-icont-min-icon

2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை பிரதமர் நரேந்திர மோடியை இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு சந்தித்து பேசுகிறார். அப்போது மேகதாது அணை கட்ட விரைவில் அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளார்.

பெங்களூரு:

காவிரி, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு

  கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மேலும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பான ஆணையை அரசிதழில் வெளியிட கோவா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே காவிரி, கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு விவகாரங்களுக்கு தீர்வு காண கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

  இது ஒருபுறம் இருக்க கர்நாடகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் நிதி கேட்டு மாநில அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் குறைவான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதற்கிடையே கர்நாடகத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதாவது சிந்தகி தொகுதியில் மட்டும் அக்கட்சி வெற்றி பெற்றது. ஆனால் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மையின் சொந்த மாவட்டத்தில் உள்ள ஹனகல் தொகுதியில் பா.ஜனதா படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து அறிக்கை அளிக்க பா.ஜனதா மேலிடம் பசவராஜ்பொம்மைக்கு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி புறப்பட்டு சென்றார்

  மேலும் டிசம்பர் 10-ந்தேதி கர்நாடக மேல்-சபையில் 25 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

  காலை 9.45 மணிக்கு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்றார். அவர் டெல்லி புறப்படுவதற்கு முன்பு தனது பெங்களூரு ஆர்.டி.நகர் இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சட்ட ஆலோசனை

  நான் இன்று (அதாவது நேற்று) டெல்லி செல்கிறேன். அங்கு மத்திய மந்திரிகளை சந்தித்து பேச உள்ளேன். பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளேன். நாளை(இன்று) அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். மாநிலங்களுக்கு இடையேயான காவிரி, கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு விஷயம் தொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

  அந்த வழக்குகளை விரைவாக முடிப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அதன் பிறகு தனியார் செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருக்கிறேன். பிறகு நாளை(அதாவது இன்று) இரவு கர்நாடகம் திரும்புகிறேன்.

மந்திரிசபை விரிவாக்கம்...

  எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளேன். அவரை சந்திக்க நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அவரிடம் மந்திரிசபை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தும் திட்டம் இல்லை. ஆனால் அவரிடம் என்ன விவாதிக்கப்படும் என்பது எனக்கு தெரியாது.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

  இதையடுத்து அவர் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு பல்வேறு மத்திய மந்திரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ள அவர், பிரதமர் மோடியை சந்திக்கவும் நேரம் ஒதுக்குமாறு கேட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதால், பிரதமர் மோடியை அவர் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு சந்திக்கிறார்.

மேகதாது திட்டம் குறித்து ஆலோசனை

  அப்போது அவர் பிரதமரிடம், கர்நாடகத்திற்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்க உள்ளார். மேலும் மேகதாது திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தி, அத்திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுப்பார் என்று கூறப்படுகிறது.

  கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த சிந்தகி, ஹனகல் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஹனகலில் பா.ஜனதா தோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியிடம், பசவராஜ் பொம்மை எடுத்துக்கூறுவார் என்று கூறப்படுகிறது.

பிரகலாத் ஜோஷியுடன் சந்திப்பு

  இந்த நிலையில் மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷியை நேரில் சந்தித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷியை நேரில் சந்தித்து பேசினேன். நான் கடந்த முறை அவரை சந்தித்தபோது, நிலக்கரி விஷயம் குறித்து பேசினேன். நிலக்கரி சுரங்கத்தில் ஒரு பகுதியை கர்நாடகத்திற்கு ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தேன். அதற்கு அவர் அனுமதி வழங்கியுள்ளார். மராட்டியத்தில் 2 நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கூடுதல் நிலக்கரி ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

மகிழ்ச்சி அளிக்கிறது

  அதற்கும் அவர் அனுமதி வழங்கியுள்ளார். தற்போதைய நிலையில் கர்நாடகத்தில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை. ஆயினும் வரும் காலத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக கூடுதலாக 2 நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டேன். அதற்கு அனுமதி கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

  மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்துகிறது. இதற்காக திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர் வள ஆணையம் தான் அனுமதி வழங்கியது. அப்போது அந்த ஆணையம், இதற்கு காவிரி நிர்வாக ஆணையத்தின் அனுமதியை பெற்று தான் பணிகளை தொடங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அதனால் நாங்கள் இந்த விஷயத்தை அந்த ஆணையத்தின் கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் வரைவு அறிக்கையை தாக்கல் செய்து அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டோம்.

அமலாக்கத்துறை விசாரணை

  அந்த ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில் அதற்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதுதொடர்பாக நாளை (அதாவது இன்று) சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். பிட்காயின் முறைகேடு குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதில் விவரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். 

விசாரணையில் தான் அதுகுறித்த விவரங்கள் வெளிவரும். இந்த விஷயத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக உள்ளோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story