கதக் சிறுமி கொலை வழக்கு: வாலிபருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கதக் சிறுமி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு:
சிறுமி கற்பழித்து கொலை
கதக் மாவட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி ஒரு தம்பதியின் மகளான 5 வயது சிறுமியை உறவுக்கார சிறுவன் ஒருவர் கற்பழித்து கொலை செய்ததோடு, உடலை சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசி இருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த சிறுவனை கைது செய்து இருந்தனர். மேலும் அந்த சிறுவன் மீது போலீசார் கதக் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு அந்த சிறுவனுக்கு தூக்கு தண்டனை விதித்து கதக் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறி இருந்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து சிறுவன் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை 5 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு சிறுவனுக்கு தூக்கு தண்டனை விதித்த கீழ் கோர்ட்டின் தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு உறுதி செய்து இருந்தது. கர்நாடக ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிறுவன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவின் மீதான விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது.
தூக்கு தண்டனை ரத்து
இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.காகவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல், குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். ஆனால் மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் குற்றம் செய்தபோது குற்றவாளிக்கு 16 வயது தான். அவரது குடும்ப பின்னணி மற்றும் சிறையில் ஒழுக்கமாக நடந்து கொண்டது போன்றவற்றை கணக்கில் எடுத்து கொண்டு தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தனர். மேலும் அவருக்கு 30 ஆணடுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டு இருந்தனர். நீதிபதிகள் கூறும்போது, ‘‘குற்றவாளி வெறுக்கத்தக்க குற்றத்தை செய்து உள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்காக அவருக்கு தூக்கு தண்டனை விதித்து இருப்பது சரியான நடவடிக்கை இல்லை என்றும், ஆயுள் தண்டனை போதுமானதாக இருக்கும் என்றும் நாங்கள் கருதுகிறோம். 30 ஆண்டுகள் அவருக்கு விதிக்கப்பட்டு உள்ள சிறைத்தண்டனை அவரால் சமூகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலை குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 30 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு முன்பு விடுதலை செய்ய கோரி கேட்க குற்றவாளிக்கு உரிமை இல்லை’’ என்று கூறினர்.
Related Tags :
Next Story