கஞ்சா செடிகள் பயிரிட்ட விவசாயி உள்பட 3 பேர் கைது
கஞ்சா செடிகள் பயிரிட்ட விவசாயி உள்பட 3 பேர் கைது
ஊட்டி
ஊட்டி அருகே கல்லட்டியில் கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்த்த விவசாயி, பறித்து சென்ற 2 பேர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
நீலகிரி மாவட்டம் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை தலைகுந்தா பகுதியில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு வெளிமாநில, பிற மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இதனை போலீசார் சோதனை செய்து கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் கல்லட்டியில் இருந்து ஊட்டியை நோக்கி இருசக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டு இருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது கல்லட்டியில் பயிரிட்ட கஞ்சா செடிகளை பறித்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை கையும், களவுமாக பிடித்து கல்லட்டி 6-வது கொண்டை ஊசி வளைவு பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு கல்லட்டியை சேர்ந்த விவசாயியான குணசேகரன் (வயது 56) தனது நிலத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டது தெரியவந்தது. 10 செடிகள் 3 அடி உயரம் வளர்ந்து இருந்தன. போலீசார் கஞ்சா செடிகளை பிடுங்கி பறிமுதல் செய்து அழித்தனர்.
3 பேர் கைது
தொடர்ந்து புதுமந்து போலீசார் குணசேகரன், ஊட்டி அருகே தாவணெ கிராமத்தை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுவன், கூடலூரை சேர்ந்த விஷ்ணு (19) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் குணசேகரனுக்கு கஞ்சா பிடிக்கும் பழக்கம் உள்ளதால் தான் மட்டும் பயன்படுத்துவதற்காக தனது தோட்டத்தில் கஞ்சா செடிகளை சட்ட விரோதமாக பயிரிட்டு உள்ளார். இதனை அறிந்த விஷ்ணு உள்பட 2 பேர் அவ்வப்போது கஞ்சா செடிகளை பறித்து காயவைத்து பயன்படுத்தினர். அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டத்தில் தறி வேலை செய்து வருகின்றனர்.
கஞ்சா செடிகளை பறித்து மற்றவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டதா என்று மேல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து குணசேகரன், விஷ்ணு ஆகிய 2 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
Related Tags :
Next Story