ரூ50 லட்சம் செலவில் தரம் உயர்த்தப்பட்ட மாதிரி நூலகம் திறப்பு விழா
உடுமலையில் ரூ.50 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்ட மாதிரி நூலகம் திறப்பு விழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
உடுமலை
உடுமலையில் ரூ.50 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்ட மாதிரி நூலகம் திறப்பு விழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
மாதிரி நூலகம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி சாலையில், குட்டைத்திடலுக்கு முன்பு கிளை நூலகம் எண்:1 செயல்பட்டு வருகிறது. பொதுநூலகத்துறையின் திருப்பூர் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்பட்டுவரும் இந்த நூலகம் 12.8.1954-ம் ஆண்டு ஓடுகள் வேயப்பட்ட கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. கடந்த 2002-ம் ஆண்டு தார்சு கட்டிடமாக கட்டப்பட்டது.
2010-ல் கூடுதலாக முதல்தளம் கட்டப்பட்டது. தரைத்தளத்தில் நூல் இரவல் வழங்கும்பகுதி, வாசகர் பகுதி ஆகியவையும், முதல் தளத்தில் குடிமைப்பணி (இந்திய ஆட்சிப்பணி) பிரிவு, இணையதள பிரிவு, மகளிர் பிரிவு ஆகியவை உள்ளன.
ரூ.50 லட்சம் செலவில் பணிகள்
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் 2018-2019 பள்ளி கல்வித்துறை மானியக்கோரிக்கையின் போது காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து தலா ஒரு நூலகம் வீதம் தேர்வு செய்து ரூ.50லட்சம் மதிப்பில் நூலகத்தை நவீன வசதிகளுடன் கூடிய மாதிரி (டிஜிட்டல்) நூலகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்அடிப்படையில் நூலகத்துறையால் திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை கிளை நூலகம் எண் :1 தேர்வு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த நூலகத்தை தரம் உயர்த்த ரூ.50லட்சம் ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் குடிமைப்பணி (இந்திய ஆட்சிப்பணி) தேர்வு பயிற்சிக்கான தனிப்பிரிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பிரிவு, குழந்தைகளுக்கான பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில் புதியதாக 15கணினிகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்காக தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய இணையதள உபகரணங்கள் வசதி செய்யப்பட்டுள்ளது.
திறப்பு விழா
நவீன வசதிகளுடன் கூடிய இந்த மாதிரி நூலகம் திறப்பு விழா வருகிற 15-ந் தேதி மாலை3 மணிக்கு நடக்கிறது. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கலெக்டர், கல்வித்துறை மற்றும் நூலகத்துறை அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
நூலக திறப்பு விழாவையொட்டி நூலகத்தில் நேற்று பல்வேறுபணிகள் நடந்தன. இந்த பணிகளை பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் பார்வையிட்டார். அப்போது அவருக்கு, மாதிரி நூலகம் குறித்த விபரங்களை நூலகர் பீர்பாஷா எடுத்துரைத்தார்.
கோரிக்கை
இந்த நூலகத்தின் பின்புறம் குப்பைகள், மண்கள் கொட்டப்படுகின்றன. சிலர் அதை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதை தடுத்து நிறுத்தி இடத்தை சுத்தம் செய்து மாதிரி போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கூடுதல் தேவைகளுக்காக நூலகத்திற்கு அந்தஇடத்தை ஒதுக்கித்தர வேண்டும் என்று கல்வியாளர்கள் மற்றும் வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story